மகாராஷ்டிர சட்டமேலவைத் தேர்தல்: பாஜக, சிவசேனை 2 இடங்களில் வெற்றி
மகாராஷ்டிர மாநில சட்டமேலவைத் தேர்தலில் 5 இடங்களுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜக, சிவசேனை தலா 2 இடங்களில் வென்றுள்ளன.
மகாராஷ்டிர மாநில சட்டமேலவைத் தேர்தலில் 5 இடங்களுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜக, சிவசேனை தலா 2 இடங்களில் வென்றுள்ளன. தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தை தக்க வைத்தது. காங்கிரஸ் கட்சி, போட்டியிட்ட 3 இடங்களிலுமே தோல்வி கண்டது.
மகாராஷ்டிரத்தில் 6 சட்டமேலவை இடங்களுக்கான தேர்தல் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆளும் பாஜக-சிவசேனை கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அதேபோல், எதிர்க்கட்சியான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸூடன் இணைந்து போட்டியிட்டது.
இந்நிலையில், தேர்தல் நடைபெற்ற 6 இடங்களில், 5 இடங்களுக்கான வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை நடைபெற்று முடிவு அறிவிக்கப்பட்டது. அதன்படி, அமராவதி மற்றும் வார்தா-சந்திரபூர்-கட்சிரோலி ஆகிய இரு இடங்களில் பாஜக வெற்றி பெற்றது.
இதேபோல், சிவசேனை கட்சி நாசிக் மற்றும் பர்பானி-ஹிங்கோலி ஆகிய இரு இடங்களில் வெற்றி கண்டது. இரு இடங்களில் போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ், ராய்கட்-ரத்னகிரி-சிந்துதுர்க் இடத்தில் வென்ற நிலையில், நாசிக்கில் சிவசேனையிடம் வீழ்ந்தது. காங்கிரஸ் கட்சி தான் போட்டியிட்ட வார்தா-சந்திரபூர்-கட்சிரோலி, பர்பானி-ஹிங்கோலி, அமராவதி ஆகிய 3 இடங்களிலுமே தோல்வி கண்டது.
பீட் மாவட்ட உள்ளாட்சி அமைப்பின் உறுப்பினர்கள் சிலரை இடைநீக்கம் செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால், உஸ்மனாபாத்-பீட்-லாதூர் இடத்துக்கான வாக்கு எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.