ஓரினச் சேர்க்கை குற்றமல்ல; எதிரான சட்டப்பிரிவு 377 ரத்து செய்யப்படுகிறது: உச்ச நீதிமன்றம்
ஓரினச் சேர்க்கை குற்றமல்ல என்றும், அதற்கு எதிரான சட்டப்பிரிவு 377ஐ ரத்து செய்வதாகவும் உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்புத் தீர்ப்பை அளித்துள்ளது.
புது தில்லி: ஓரினச் சேர்க்கை குற்றமல்ல என்றும், அதற்கு எதிரான சட்டப்பிரிவு 377ஐ ரத்து செய்வதாகவும் உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்புத் தீர்ப்பை அளித்துள்ளது.
ஓரினச்சேர்க்கையை குற்றமாக வரையறுக்கும் இந்திய தண்டனையியல் சட்டத்தின் 377-ஆவது பிரிவை ரத்து செய்யக் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல்சாசன அமர்வு இன்று இந்த தீர்ப்பை அளித்துள்ளது.
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ஓரினச்சேர்க்கை அங்கீகரிக்கப்படாததால், அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது குற்றச் செயலாகக் கருதப்படுகிறது. அதற்கேற்ப இந்திய தண்டனையியல் சட்டத்தின் 377-ஆவது பிரிவை ஓரினச்சேர்க்கை என்பது குற்றச் செயல் என்றே வரையறுக்கப்பட்டுள்ளது. அந்தச் செயலின் தன்மையைப் பொருத்து அதற்கேற்ப 10 ஆண்டுகள் வரையோ அல்லது ஆயுள் சிறையோ கூட விதிக்க அந்த சட்டப் பிரிவு வழிவகுக்கிறது.
Advertisement
Advertisement
இந்நிலையில், அந்த விதியை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. முக்கியமாக சுய விருப்பத்துடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களை தண்டிக்கக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டது. மறுபுறம் ஓரினச்சேர்க்கையை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தியும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அவற்றின் மீதான இறுதிகட்ட விசாரணை, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், ஆர்.எஃப்.நாரிமன், இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய அரசியல்சாசன அமர்வு முன்பு கடந்த ஜூலை 17-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, ஓரினச்சேர்க்கைக்கு எதிராக மனுதாக்கல் செய்திருந்தவரின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் 377-ஆவது சட்டப் பிரிவை நீக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்படுவது குறித்து கருத்து தெரிவித்தார். ஒரு சட்டத்தை திருத்த வேண்டுமா? அல்லது நீக்க வேண்டுமா? என்பதை முடிவு செய்ய வேண்டியது நாடாளுமன்றம் மற்றும் பேரவைகளின் வேலை என்று அவர் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஒருவேளை அத்தகைய சட்டம் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்குமானால், அதை அரசாங்கமே திருத்தட்டும் என நீதிமன்றங்கள் காத்துக் கொண்டிருக்காது எனத் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பிற மனுதாரர்களின் வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைப்பதாகத் தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.