தெலங்கானா சட்டப்பேரவை கலைப்பு
தெலங்கானா சட்டப் பேரவையை கலைக்குமாறு முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான மாநில அமைச்சரவை வியாழக்கிழமை பரிந்துரைத்தது.
தெலங்கானா சட்டப் பேரவையை கலைக்குமாறு முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான மாநில அமைச்சரவை வியாழக்கிழமை பரிந்துரைத்தது. இதுதொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மனிடம் அளிக்கப்பட்டது.
அதை ஆளுநர் ஏற்றுக்கொண்டதாகவும், புதிய அரசு அமையும் வரை சந்திரசேகர் ராவே காபந்து முதல்வராக நீடிக்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக அந்த மாநிலத்தில் நடைபெற்று வந்த நடப்பு தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) அரசின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக அடுத்த சில மாதங்களில் அங்கு புதிதாக தேர்தல் நடத்தப்படலாம் எனஎதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்றாற்போல 105 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலையும் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.
ஒரே நாளில் தெலங்கானா அரசியல் அரங்கில் அரங்கேறியுள்ள இந்த திடீர் திருப்பம், தேசிய அளவில் பிரதான விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளது.
இதனிடையே, மாநில அரசின் இந்த முடிவை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடியுள்ளன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப் பேரவையை சந்திரசேகர் ராவ், தனது சுயநலத்துக்காக கலைத்துவிட்டதாக அக்கட்சிகள் விமர்சித்துள்ளன.
தெலங்கானா புதிய மாநிலமாக உதயமான பிறகு, அங்கு நடைபெற்ற முதல் பேரவைத் தேர்தலில் சந்திரசேகர் ராவ் தலைமையிலான டிஆர்எஸ் கட்சி வாகை சூடியது. மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் 63 இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்றது. தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த சந்திரசேகர் ராவ், மாநிலத்தின் முதல்வராக கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி பதவியேற்றார்.
அவரது தலைமையிலான அரசின் ஆட்சிக்காலம் நிறைவடைய இன்னும் 9 மாதங்கள் உள்ள நிலையில், கடந்த சில வாரங்களாக சில ஊகத் தகவல்கள் வெளியாகி வந்தன. அதாவது, பேரவையைக் கலைத்துவிட்டு தேர்தலை முன்கூட்டியே சந்திக்க சந்திரசேகர் ராவ் திட்டமிடுவதாகக் கூறப்பட்டது. மாநில அரசு மீது மக்களிடையே இருக்கும் மதிப்பு சரிவடைவதற்குள் மீண்டும் தேர்தலை நடத்தி ஆட்சியைக் கைப்பற்ற அவர் வியூகம் வகுத்து வருவதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், மாநில அமைச்சரவைக் கூட்டம் ஹைதராபாதில் வியாழக்கிழமை மதியம் நடைபெற்றது. மொத்தம் 22 நிமிடங்கள் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில், சட்டப் பேரவையை கலைப்பதற்கு பரிந்துரைக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டது. அதை அனைத்து அமைச்சர்களும் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து முதல்வர் சந்திரசேகர் ராவ், ஆளுநரைச் சந்தித்து தீர்மானத்தின் பிரதியை அளித்தார். அதை ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்த ஆளுநர், மறுதேர்தல் நடைபெறும் வரை காபந்து அரசை நடத்துமாறு சந்திரசேகர் ராவிடம் கேட்டுக் கொண்டார். அதற்கு அவர் இசைவு தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் இதுகுறித்த தகவல்களையும், பரிந்துரைகளையும் முறைப்படி ஆளுநர் தெரிவிக்க உள்ளார். அதன்பேரில் அடுத்தகட்ட முடிவை உள்துறை அமைச்சகமும், தேர்தல் ஆணையமும் எடுக்கும் எனத் தெரிகிறது.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிúஸாரம் உள்ளிட்ட மாநிலங்களில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதனுடன் சேர்த்து தெலங்கானாவுக்கும் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, ஆளுநரை சந்தித்தற்கு பிறகு நிருபர்களை சந்திரசேகர் ராவ் சந்தித்தார்.
காங்கிரஸ் கட்சிதான் தெலங்கானாவின் முதல் எதிரி. ராகுல் காந்தி நாட்டின் மிகப்பெரிய கேலிக்குரிய நபராக இருக்கிறார் என்றார் நிருபர்களிடம் சந்திரசேகர் ராவ்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.