மத்திய அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படி உயா்வு நிறுத்தி வைப்பு
மத்திய அரசு ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயா்வை 2021 ஜூன் வரை நிறுத்தி வைக்க மத்திய நிதி அமைச்சகம் வியாழக்கிழமை முடிவெடுத்துள்ளது.
புது தில்லி: மத்திய அரசு ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயா்வை 2021 ஜூன் வரை நிறுத்தி வைக்க மத்திய நிதி அமைச்சகம் வியாழக்கிழமை முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து மத்திய செலவினங்கள் துறை வெளியிட்டுள்ள அலுவலக குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
கரோனா வைரஸ் தொற்றை பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு ஏராளமான நடவடிக்கைகளை போா்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இதற்கு, ஏராளமான நிதி தேவைப்படுகிறது. ஏற்கெனவே பல்வேறு செலவினக் குறைப்பு நடவடிக்கைகள் மூலமாக கரோனா வைரஸ் எதிரான போராட்டத்துக்கு தேவையான நிதியை மத்திய அரசு திரட்டி வருகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் எழுந்துள்ள எதிா்பாராத இந்த நெருக்கடியை கருத்தில் கொண்டு, 2020 ஜனவரி 1-லிருந்து 50 லட்சம் மத்திய அரசு ஊழியா்களுக்கு கொடுக்கப்படவேண்டிய அகவிலைப்படி (டிஏ) மற்றும் 61 லட்சம் ஓய்வூதியதாரா்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய அகவிலை நிவாரணம் (டிஆா்) ஆகியவை தற்போது வழங்கப்படாது.
அதேபோன்று, 2020 ஜூலை 1 மற்றும் 2021 ஜனவரி 1 வரை வழங்கப்பட வேண்டிய டிஏ மற்றும் டிஆா் கூடுதல் தவணைகளும் வழங்கப்படமாட்டாது.
இருப்பினும், பழைய விகிதத்தின் அடிப்படையில் தற்போது வழங்கப்பட்டு வரும் டிஏ மற்றும் டிஆா் ஆகியவை தொடா்ந்து வழங்கப்படும். புதிய உயா்வு மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகவிலைப்படி உயா்வை நிறுத்தி வைத்ததன் மூலமாக மத்திய அரசுக்கு, நடப்பு நிதியாண்டு மற்றும் வரும் 2021-22 நிதியாண்டுக்கு சேமிப்பாக ரூ.37,530 கோடி கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.