உ.பி. உள்பட மேலும் 3 மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐத் தொட்டது
நாட்டில் ஏற்கனவே பல மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100-ஐத் தொட்டுவிட்ட நிலையில், இந்தப் பட்டியலில் சனிக்கிழமை உத்தரப்பிரதேசம், சட்டீஸ்கர், நாகாலாந்து மாநிலங்களும் இணைந்துள்ளன.
நாட்டில் ஏற்கனவே பல மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100-ஐத் தொட்டுவிட்ட நிலையில், இந்தப் பட்டியலில் சனிக்கிழமை உத்தரப்பிரதேசம், சட்டீஸ்கர், நாகாலாந்து மாநிலங்களும் இணைந்துள்ளன.
நாட்டில் தமிழகம் உள்பட ஐந்து மாநில பேரவைத் தேர்தல் முடிந்த பிறகு மே 4ஆம் தேதியிலிருந்து கடந்த 68 நாள்களில் 38வது முறையாக சனிக்கிழமையும் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டன.
இன்று தலைநகர் புது தில்லியில் பெட்ரோல் விலை 35 காசுகள் உயர்ந்து ரூ.100.91க்கும், டீசல் விலை 26 காசுகள் உயர்ந்து ரூ.89.88க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
புது தில்லி உள்பட இதர மாநிலங்களிலும் பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து உயர்த்தப்பட்டாலும், ஒவ்வொரு மாநிலங்களிலும், அந்தந்த மாநிலங்களில் விதிக்கப்படும் வரிகளுக்கு ஏற்ப விலைகளில் மாற்றங்கள் உள்ளன.
இதையும் படிக்கலாமே.. பெட்ரோல் விலை 100 ஆனதில் பெட்ரோல் நிலையங்களுக்கு இப்படி ஒரு சங்கடமா?
அந்த வகையில் கடந்த ஞாயிறன்று, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தமிழகம், சிக்கிம், ஜம்மு-காஷ்மீா் உள்பட 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்த நிலையில், இன்று மேலும் மூன்று மாநிலங்கள் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளன.
தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பேரவைத் தோ்தல் நிறைவடைந்த பிறகு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையைத் தொடா்ந்து உயா்த்தி வருகின்றன. அதன் காரணமாக நாடு முழுவதும் அவற்றின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயா்ந்துள்ளது.
கடந்த வாரம் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், ஆந்திர பிரதேசம், தெலங்கானா, கா்நாடகம், ஜம்மு-காஷ்மீா், ஒடிஸா, தமிழகம், கேரளம், பிகாா், பஞ்சாப், லடாக், சிக்கிம் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்துள்ளது.
ராஜஸ்தான், ஒடிஸா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் ஒரு லிட்டா் டீசல் விலை ரூ.100-ஐ கடந்துள்ளது.
அதாவது, மே 4ஆம் தேதிக்குப் பிறகு இரண்டு மாத காலத்தில் பெட்ரோல் விலை ரூ.10.51 காசுகளும், லிட்டர் விலையில் ரூ.9.15 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன.
இதையும் படிக்கலாமே.. 1990-களில் ஒற்றை இலக்கத்தில் பெட்ரோல் விலை
விலை உயரக் காரணம்: பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பே காரணம் என்று மத்திய அரசு தெரிவித்து வருகிறது. சா்வதேச அளவில் கச்சா எண்ணெயின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால், அதன் உற்பத்தி அதிகரிக்கப்படாததால் விலை உயா்ந்து வருகிறது.
கச்சா எண்ணெய் விலையுடன் சோ்த்து மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் கலால், மதிப்புக் கூட்டு வரியும் (வாட்) பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு முக்கியக் காரணமாக உள்ளது.
பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் வைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென்று பல மாநில அரசுகள் கோரி வருகின்றன. பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரி வருகின்றனா். எரிபொருளை சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வரம்புக்குள் கொண்டு வர வேண்டுமென்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.