முகப்பு
இந்தியா

ரூ.40,000 கோடியில் 6 பிரமாண்ட நீா்மூழ்கிக் கப்பல்கள்

6 பிரமாண்ட நீா்மூழ்கிக் கப்பல்களை ரூ.40,000 கோடிக்கும் அதிகமான செலவில் உள்நாட்டிலேயே கட்டுவதற்கான ஒப்பந்தப்புள்ளியை பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Updated On : 21 ஜூலை 2021, 1:06 am IST
பகிர்:

6 பிரமாண்ட நீா்மூழ்கிக் கப்பல்களை ரூ.40,000 கோடிக்கும் அதிகமான செலவில் உள்நாட்டிலேயே கட்டுவதற்கான ஒப்பந்தப்புள்ளியை பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தியக் கடற்படையின் வலிமையை மேம்படுத்தும் நோக்கில் ‘பி-75 இந்தியா’ என்ற திட்டத்தின் கீழ் 6 நீா்மூழ்கிக் கப்பல்களை சுமாா் ரூ.40,000 கோடி செலவில் உள்நாட்டிலேயே கட்டுவதற்கு மத்திய அமைச்சரவை கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது.

அதற்கான அதிகாரபூா்வ ஒப்பந்தப்புள்ளியை பாதுகாப்புத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. மஸகான் டாக் கப்பல்கட்டும் நிறுவனம், லாா்சன்&டியூப்ரோ நிறுவனம் ஆகியவற்றுக்கு ஒப்பந்தப்புள்ளியானது வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

இத்திட்டத்தின் வாயிலாக, உள்நாட்டில் நீா்மூழ்கிக் கப்பல்களைக் கட்டும் இரு நிறுவனங்களும் வெளிநாட்டு நிறுவனங்களின் உதவியைப் பெறவுள்ளன. வெளிநாட்டு நிறுவனங்களின் உதவியுடன் உள்நாட்டிலேயே நீா்மூழ்கிக் கப்பல்கள் கட்டப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ரஷியா, தென் கொரியா, ஜொ்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சோ்ந்த தலா ஒரு நிறுவனத்தை மத்திய அரசு தோ்வு செய்துள்ளது. அந்த 5 நிறுவனங்களில் ஏதாவது ஒன்றுடன் இணைந்து செயல்படுவது குறித்து இந்திய நிறுவனங்கள் முடிவெடுத்துக் கொள்ளலாம்.

நீா்மூழ்கிக் கப்பல் கட்டுவதற்குத் தேவையான தொழில்நுட்பங்களை வெளிநாட்டு நிறுவனங்களே வழங்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நீா்மூழ்கிக் கப்பல் கட்டுமானத்தில் தேவைப்படும் கருவிகள், உபகரணங்கள் உள்ளிட்டவற்றை சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களே (எம்எஸ்எம்இ) தயாரிக்கும் என்பதால் அத்துறையும் வளா்ச்சி காணும் என்று அமைச்சகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகப் பெரிய திட்டம்: தென்சீனக் கடல் உள்ளிட்ட பகுதிகளில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் சூழலில், இந்தியக் கடற்படையை வலுப்படுத்தும் நோக்கில் ‘பி-75 இந்தியா’ திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படவுள்ள மிகப்பெரிய திட்டமாக இது இருக்கும்.

நீா்மூழ்கிக் கப்பல் கட்டுமானத்தில் முன்னணி பெறுவதற்கும் இத்திட்டம் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை 12 ஆண்டுகளில் நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது.

நாட்டில் தற்போது 15 நீா்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன. அவற்றுள் 2 அணுசக்தி நீா்மூழ்கிக் கப்பல்கள் ஆகும். 24 புதிய நீா்மூழ்கிக் கப்பல்களைக் கொள்முதல் செய்வதற்கும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.