லக்னௌவில் அம்பேத்கர் நினைவிடத்துக்கு அடிக்கல் நாட்டினார் குடியரசுத் தலைவர்
உத்தர பிரதேச மாநிலத் தலைநகர் லக்னௌவில் அரசியல் சட்ட வரைவுக் குழுத் தலைவரான பி.ஆர்.அம்பேத்கரின் நினைவிடத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அடிக்கல் நாட்டினார்.

உத்தர பிரதேச மாநிலத் தலைநகர் லக்னௌவில் அரசியல் சட்ட வரைவுக் குழுத் தலைவரான பி.ஆர்.அம்பேத்கரின் நினைவிடத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அடிக்கல் நாட்டினார்.
லக்னௌ நகரின் ஐஷ்பாக் பகுதியில் ரூ.45 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள இந்த நினைவிடத்தில் நூலகம், ஆய்வு மையம், புகைப்பட அரங்கம், அருங்காட்சியகம், உணவகம், 750 பேர் அமரக்கூடிய மண்டபம் ஆகியவை அமைய உள்ளன. நினைவிடத்தில் 25 அடி உயரம் கொண்ட அம்பேத்கரின் சிலையும் நிறுவப்படும்.
இந்த நினைவிடத்தை அமைப்பதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டினார். விழாவில் உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மௌர்யா, தினேஷ் சர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர். குடியரசுத் தலைவர் இவ்விழாவில் பேசியது:
93 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில்தான் அம்பேத்கர் "சமதா' என்ற பத்திரிகையைத் தொடங்கினார். அவரது சமத்துவ சமுதாயச் சிந்தனையைப் பரப்பவே இந்தப் பத்திரிகை தொடங்கப்பட்டது. சமத்துவம் இல்லாமல் சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வாய்ப்பில்லை. பெண்களுக்கு சம உரிமைகளை உறுதிப்படுத்துவதில் அம்பேத்கர் தீவிரமாகச் செயல்பட்டார்.
அமெரிக்காவில் அந்நாட்டு அரசியல் சாசனம் அமலுக்கு வந்து 100 ஆண்டுகளுக்குப் பிறகே பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. ஆனால் நமது அரசியல் சாசனம் 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி அமலுக்கு வந்தபோதே பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. இதற்கான பெருமை அம்பேத்கரையே சேரும்.
சுதந்திரப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஹிந்து-முஸ்லிம்களுக்கு இடையே விரோதம் இருந்து வந்த நிலையில், "நாங்கள் முதலில் இந்தியர்கள். அதன் பிறகே ஹிந்து, முஸ்லிம், சீக்கியர், கிறிஸ்தவர்' என்று மக்கள் கூறுவது வழக்கம். ஆனால் அப்போது, நாங்கள் முதலில் இந்தியர்கள். பிறகும் இந்தியர்கள். கடைசியிலும் இந்தியர்கள் என்று அம்பேத்கர் கூறுவது வழக்கம். அதற்கு மதம், ஜாதி, இனம் ஆகியவற்றுக்கு இடமில்லை என்று அர்த்தம். புத்தரின் சித்தாந்தத்தை அம்பேத்கர் பரப்பி வந்ததுடன் அனைவரின் நல்வாழ்வு என்ற கொள்கையை உயர்த்திப் பிடித்தார்.
அம்பேத்கர் நினைவிடத்தைக் கட்டுவதற்கான உத்தர பிரதேச அரசின் முயற்சி பாராட்டத்தக்கது. கடந்த 2017இல் அம்பேத்கர் சர்வதேச கவுன்சிலை தில்லியில் மத்திய அரசு அமைத்தது. அம்பேத்கரின் கொள்கைகளைப் பின்பற்றி தேசத்தைக் கட்டமைப்பதிலேயே நமது வெற்றி அடங்கியுள்ளது என்றார்.
முன்னதாக, குடியரசுத் தலைவரை வரவேற்று உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்த்பென் படேல் பேசுகையில் "அம்பேத்கர் நினைவிடமானது இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கக் கூடியதாக இருக்கும். நமது அரசியல் சாசனத்தை வடிவமைத்த அம்பேத்கரின் பெயர் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது' என்றார்.