இந்தியா

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?

ENS


புது தில்லி: வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் நேற்றுடன் (ஜூலை 31) முடிந்துவிட்டது. இன்னமும் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யாதவர்கள், தாக்கல் செய்யத் தவறவிட்டவர்கள் இனி என்ன செய்ய வேண்டும்?

கடந்த இரண்டு ஆண்டுகளாக, கரோனா பேரிடர் காரணமாக மக்களின்  சிரமங்களைத் தவிர்க்க, வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து வந்தது மத்திய அரசு. ஆனால், இந்த முறை கால  நீட்டிப்பு செய்யப்படவில்லை.  வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 31 தான் என்று அறிவித்துவிட்டனர். கடைசி நாள் முடிந்த நிலையில் பலரும் எதிர்பார்த்தபடி நீட்டிப்பு அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

அபராதம்.. அதுவும் எவ்வளவு?

ஜூலை 31ஆம் தேதிக்குள் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யாவிட்டாலும் , இந்தாண்டு (2022) டிசம்பர் 31ஆம் தேதி வரை கணக்கைத் தாக்கல் செய்ய முடியும்.

ஆனால், இது தாமத வருமான வரிக்கணக்குத் தாக்கலாகக் கருத்தில் கொள்ளப்படும். அவ்வாறு தாமதமாக வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வோர் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

ஜூலை 31ஆம் தேதிக்குப் பிறகு கணக்குத் தாக்கல் செய்வோரிடமிருந்து தாமத கட்டணம் வசூலிக்கப்படும். 

இதன்படி, ஆண்டுக்கு ரூ. 5 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டும்  தனிநபா்களுக்கு ரூ. 5 ஆயிரம், ரூ.5 லட்சத்துக்கு கீழ் வருமானம்  ஈட்டுபவா்களுக்கு ரூ. 1,000 தாமததுக்கான அபராதமாக வசூலிக்கப்படும்.

வேறென்ன இழப்பு?

நிலுவைத் தேதியை தவறவிட்டவர்கள், உங்கள் சொத்து / பங்குகள் / மூலதனச் சொத்துகளின் விற்பனையில் ஏற்படும் இழப்புகள் போன்ற (வீட்டுச் சொத்தின் இழப்பு தவிர) ஏதேனும் இருந்தால் அவற்றைத் தொடர அனுமதிக்கப்படாது என்று நிதியியல் நிபுணர் ஒருவர் கூறுகிறார்.

ஆனால், இதுபோன்ற பங்குகள் அல்லது சொத்துகள் விற்பனையில் ஏற்படும் இழப்புகளை, நீங்கள் 8 ஆண்டுகள் வரை தொடர அல்லது நீட்டித்துக் கொள்ள இயலும். அதாவது, எதிர்காலத்தில், விற்பனை அல்லது பங்குகள் அல்லது உறுதிப்பத்திரங்கள் விற்பனையில் உங்களுக்கு லாபம் கிடைக்கும் போது, அதனை நீங்கள் முன்நிதியாண்டில் பெற்ற நஷ்டத்திலிருந்து கழித்துவிட்டு, நிகர லாபத்துக்கு மட்டுமே வரிப்பிடித்தம் செய்யப்படும். 

ஒரு வேளை, இந்த ஆண்டு ஜூலை 31ஆம் தேதிக்குப் பிறகு ஒருவர் தனது வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்தார் என்றால், இந்தச் சலுகை கிடைக்காது. அதாவது அவரது நஷ்டம் அடுத்த நிதியாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட இயலாது. லாபம் ஈட்டும்போது மொத்த லாபத் தொகைக்கும் அவர் வரி கட்டியாக வேண்டும். 

இதே நிலைதான், ஜூலை 31ஆம் தேதிக்குப் பிறகு வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் ஒருவர், அசையாச் சொத்துகளை விற்கும்போது அடையும் நஷ்டம் அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட மாட்டாது.

மூன்றாவது.. ஆனால் முக்கியமானது

இனி தாமதமாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வோர் எதிர்கொள்ளும் மூன்றாவது ஆனால் மிக முக்கியமான சிக்கல் வட்டி வடிவில் உள்ளது. ஒரு வேளை, நீங்கள் தாமதமாக வருமான வரிக்கணக்குத் தாக்கல் செய்யும்போது, உங்கள் வருவாய்க்கு ஒரு குறிப்பிட்டத் தொகையை வரியாக செலுத்த நேரிட்டால், அந்த வரித் தொகைக்கு ஒரு மாதத்துக்கு ஒரு சதவீதம் என்ற அளவில் வட்டியும் செலுத்த நேரிடும்.

இந்த வரிக்கான வட்டித் தொகை என்பது, நீங்கள் செலுத்தும் தாமத கணக்குத் தாக்கலுக்கான அபராதத் தொகையுடன் கூடுதலாக வசூலிக்கப்படும்.

அறிய வேண்டிய ஏழு தகவல்கள்

  • 60 வயதுக்கு உள்பட்டவர்கள் ஆண்டுவருவாயாக ரூ.2.5 லட்சம் இருந்தால் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
  • 60 வயதுக்கு மேற்பட்டு, 80 வயதுக்கு உள்பட்டவர்களாக இருந்து ஆண்டுக்கு ரூ.3 லட்சத்துக்கு மேல் வருமானம் கொண்டவர்கள் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
  • 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமகன்களாக இருந்து, ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மேல் இருந்தால் அவர்களும் நிச்சயம் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
  • தாமதமாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வோர் தாமத கட்டணம் செலுத்த வேண்டும்.
  • ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டும் தனிநபா்களுக்கு தாமதக் கட்டணம் ரூ.5 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது.
  • ரூ.5 லட்சத்துக்கு கீழ் வருமானம் ஈட்டுபவா்களுக்கு ரூ.1,000 தாமத கட்டணம் வசூலிக்கப்படும்.
  • தாமதமாக வரிக் கணக்கு தாக்கல் செய்தவர்கள் செலுத்தும் வருமான வரிக்கும் வட்டி செலுத்த நேரிடும்.
     

திருத்தம் செய்ய முடியாது

ஜூலை 31ஆம் தேதிக்குள் வருமான வரித் தாக்கல் செய்துவிட்டீர்கள், அதன்பிறகு உங்களுக்குத் தெரிய வருகிறது. அதில் ஒரு தவறு அல்லது பிழை இருக்கிறது என்று. 2022ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் அதில் நீங்கள் திருத்தம் மேற்கொள்ளலாம். அதாவது, காலக்கெடுவுக்குள் வருமான வரித் தாக்கல் செய்தவர்கள், டிசம்பர் 31ஆம் தேதிக்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் திருத்தம் செய்துகொள்ளலாம். ஆனால், தாமதமாக வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வோருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படாது. எனவே, காலக்கெடு முடிந்துவிட்டதால், இனி வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வோர் மிக மிக கவனமாகப் பதிவு செய்ய வேண்டும். ஒரு வேளை கவனிக்காமல் விடப்படும் எந்தத் தவறும் பிழையும் திருத்தம் செய்ய முடியாது என்கிறார் அட்வான்டேஜ் கன்சல்டிங் குழுமத்தைச் சேர்ந்த சேட்டன் டாகா.

ஆண்டு தகவல் அறிக்கை

மத்திய அரசு கடந்த வருடம் 'ஆண்டு தகவல் அறிக்கை (ஏஐஎஸ்)' என்ற முறையை நவம்பர் மாதம் அறிமுகம் செய்தது. அதில், சேமிப்புக் கணக்கில் கிடைக்கும் வட்டி, பங்குகள், மூலதன லாபம் மற்றும் பங்கு பரிமாற்றம் போன்றவை இடம்பெற்றிருக்கும். எனவே, ஒரு வரி செலுத்துவோர் இந்த ஏஐஎஸ் எனப்படும் ஆண்டு தகவல் அறிக்கை மற்றும் படிவம் 26 ஏ ஆகியவற்றை நன்கு ஒப்பிட்டு அதில் ஏதேனும் தகவல் வேறுபடுகிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். எனவே, வரி செலுத்துவோர், தங்களது ஆண்டு தகவல் அறிக்கையில் இருக்கும் தகவல் முற்றிலும் அல்லது பகுதியளவு சரி என்பதைக் கண்டறிவது அசாதாரணமானது ஒன்றும் அல்ல என்கிறார்கள் நிபுணர்கள்.

ஆண்டு தகவல் அறிக்கையை வரி செலுத்துவோர் பதிவு செய்வதில்லை. எனவே, ஒருவர் தனது ஆண்டு தகவல் அறிக்கையில் இருக்கும் தவறான தகவலின் எண்ணை வரி செலுத்தும் போது பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு வேறுபட்டிருக்கும் தகவல் குறித்து வரித் துறை காரணம் கேட்கலாம். அப்போது வரி செலுத்துவோர், ஆண்டு தகவல் அறிக்கையின் இணையதளம் வாயிலாக தங்களது கருத்துகளை அல்லது தவறான தகவல்களை மாற்றுவதற்கான கோரிக்கையை முன்வைக்கலாம்.

ஆண்டு தகவல் அறிக்கையில் இருக்கும் தகவல் தவறானது என்று வரி செலுத்துவோர் கருதினால், அதற்கான பின்னூட்ட தொழில்நுட்பச் சேவையை பயனாளர் பெற முடியும். எனவே, வரி செலுத்துவோர், தனது வருமான வரிக் கணக்குத் தாக்கல் விவரங்கள், ஏஐஎஸ் எனப்படும் ஆண்டு தகவல் அறிக்கையிலிருந்து வேறுபடுவதற்கான சரியான காரணம் என்ன என்பது குறித்த ஆதாரத்தைப் பெற முடியும் என்கிறார்கள்.

டிசம்பர் 31ஆம் தேதிக்குள் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாவிட்டால்?

டிசம்பர் 31ஆம் தேதிக்குப் பிறகு வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய சட்டம் அனுமதிக்கவில்லை. அப்படிப்பட்ட வரி செலுத்துவோருக்கு வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்படும். பிறகு அவர்கள் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்படும். மற்றொரு வாய்ப்பு என்னவென்றால், தாமதமாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கு மத்திய நேரடி வரி வருவாய் ஆணையத்திடம் மன்னிப்புக் கடிதம் அனுப்பி பிறகு வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய முடியும்.

ஆனால், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாததற்கு ஒருவர் அளிக்கும் காரணம் ஏற்புடையதாக இருந்தால் மட்டுமே மத்திய நேரடி வரி வருவாய் ஆணையம், அந்த கடிதத்தை ஏற்றுக் கொண்டு வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய அனுமதிக்கும். இந்த வழிமுறைகள் அனைத்தும், அசாதாரண சூழ்நிலையில், விதிவிலக்குகளுக்கு மட்டும் பொருந்துமே தவிர, தனியொருவர் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாமல் இருந்துவிட்டு அதற்கான நிவாரணமாக பெற இயலாது என்கிறார்கள் நிபுணர்கள்.

கணக்குத் தாக்கல் செய்தோர்

தனிநபா் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணி வரையிலான நிலவரப்படி, 67.97 லட்சம் போ் தாக்கல் செய்திருப்பதாகக் கூறப்பட்டது. இதையடுத்து நிகழாண்டு வரிமான வரிக் கணக்கு தாக்கல் செய்தவா்களின் மொத்த எண்ணிக்கை 5.73 கோடியை எட்டியது.

2021-22 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி தினம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், ஜூலை 30 வரை 5.1 கோடி போ் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்திருந்த நிலையில், கடைசி தினமான ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணி வரையிலான நிலவரப்படி 67.97 லட்சம் போ் தாக்கல் செய்திருந்தனா். அதிலும் குறிப்பாக 10-11 மணி வரையிலான ஒருமணி நேரத்தில் 4,50,013 வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாக வருமான வரித் துறை ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2: ஐசக் நியூட்டன் மெட்ரிகுலேஷன் பள்ளி 100% தோ்ச்சி

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

சித்திரை அமாவாசை சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT