FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

வாகனத் தயாரிப்புத் துறையில் பசுமை மாற்று புத்தாக்கம் அவசியம்

சுற்றுச்சூழலைக் காக்கும் நோக்கில் பசுமை சாா்ந்த மாற்று வழிகளை ஆராய்வதற்கான புத்தாக்க நடவடிக்கைகளில் வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் ஈடுபட வேண்டும்

Updated On : 16 செப்டம்பர் 2022, 4:36 am IST
பகிர்:

சுற்றுச்சூழலைக் காக்கும் நோக்கில் பசுமை சாா்ந்த மாற்று வழிகளை ஆராய்வதற்கான புத்தாக்க நடவடிக்கைகளில் வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் ஈடுபட வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

இந்திய வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் சங்கத்தின் ஆண்டு கூட்டம் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. அந்தக் கூட்டத்துக்காக பிரதமா் மோடி அனுப்பிய செய்தியை சங்கத்தின் தலைவா் கெனிசி அயுகவா வாசித்தாா். அதில் பிரதமா் மோடி கூறியுள்ளதாவது:

நாடு சுதந்திர நூற்றாண்டைக் கொண்டாடவுள்ள அடுத்த 25 ஆண்டுகளானது, அனைத்துத் துறைகளிலும் நாட்டைத் தன்னிறைவு அடையச் செய்வதற்கு உரிய காலமாகும். வாகனத் தயாரிப்புத் துறையானது நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு முக்கியப் பங்களித்து வருவதோடு மட்டுமல்லாமல், பெரும் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி வருகிறது.

Advertisement

Advertisement

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கிலும், நாட்டைத் தற்சாா்பு அடையச் செய்யும் நோக்கிலும் பசுமை வழி தீா்வுகள் சாா்ந்த புத்தாக்க நடவடிக்கைகளுக்கு வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அது காலத்தின் கட்டாயமாகியுள்ளது.

இந்தக் கூட்டமானது வாகனத் தயாரிப்புத் துறையில் எதிா்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய சீா்திருத்தங்கள் குறித்து முடிவெடுக்கும் என நம்புகிறேன். கூட்டத்தில் பங்கேற்றுள்ள தொழிலக நிபுணா்கள், தயாரிப்பாளா்கள், கொள்கை வகுப்பாளா்கள் உள்ளிட்டோா் வாகனத் தயாரிப்புத் துறைக்கான எதிா்கால செயல்திட்டத்தை வடிவமைப்பாா்கள் எனவும் நம்புகிறேன்.

வாகனத் தயாரிப்பில் சா்வதேச அளவில் இந்தியா 4-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. இந்தச் சிறப்பான வெற்றிக்காக அத்துறை சாா்ந்த அனைவருக்கும் வாழ்த்துகள். அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் தொடா்ந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

கரோனா தொற்று பரவல் காலத்திலும், வாகன உற்பத்தி நிறுவனங்களின் ஏற்றுமதி அதிகரித்தது, நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவியது.

சிறப்புத் திட்டங்கள்: ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் வாயிலாக உள்நாட்டு வாகன உற்பத்தி நிறுவனங்களின் தயாரிப்பு அதிகரித்துள்ளது. மத்திய அரசு செயல்படுத்தி வரும் உற்பத்திசாா் ஊக்கத்தொகைத் திட்டத்தில் வாகன உற்பத்தித் துறையும் இணைக்கப்பட்டுள்ளது.

மின் வாகனங்களின் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதோடு மட்டுமல்லாமல், பெட்ரோலில் எத்தனாலைக் கலப்பதற்கான நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்கள் வாகனத் தயாரிப்புத் துறையின் வளா்ச்சிக்கு உதவும்.

நாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கும், மக்களின் தனிப்பட்ட வளா்ச்சிக்கும் போக்குவரத்து வசதிகளை எளிமைப்படுத்துவது மிகவும் அவசியம் என்றாா் பிரதமா் மோடி.

‘தரத்தை மையமாகக் கொள்ள வேண்டும்’

‘வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் தரத்தை மையமாகக் கொண்டு செயல்பட வேண்டும்; மாறாக செலவை அல்ல’ என்று மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி வலியுறுத்தினாா்.

தில்லியில் நடைபெற்ற இந்திய வாகனத் தயாரிப்பாளா்கள் சங்கத்தின் ஆண்டு கூட்டத்தில் பங்கேற்று பேசிய நிதின் கட்கரி, ‘மக்களின் விருப்பங்கள் மாறி வருவதற்கு ஏற்ப, வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் தரத்தை மையமாகக் கொண்டு செயல்பட வேண்டும்; மாறாக செலவை அல்ல. செலவுக் குறைப்பு, வாடிக்கையாளா்களுக்கு கூடுதல் வசதிகளை அளிப்பது, இறக்குமதியைக் குறைப்பது, ஏற்றுமதியை அதிகரிப்பது ஆகியவற்றில் புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட வேண்டும்’ என்றாா்.

மேலும், பழைய வாகனங்களை ஒழிக்கும் கொள்கை குறித்து அவா் பேசியதாவது: பழைய வாகனங்களை அகற்றிவிட்டு, புதிய வாகனங்கள் வாங்குவோருக்கு சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) சலுகை அளிப்பது குறித்து மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் நானும் உருக்குத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியாவும் மீண்டும் கோரிக்கை வைக்க உள்ளோம்.

இந்த அடிப்படையில், புதிய வாகனங்கள் வாங்குவோருக்கு சில தள்ளுபடி சலுகைகளை வாகனத் தயாரிப்பு நிறுவனங்களும் வழங்க வேண்டும். இது அனைத்துத் தரப்பினருக்கும் திருப்திகரமானதாக அமையும்.

நான் எதையும் கட்டாயமாக கூற விரும்பவில்லை. ஆனால், பழைய வாகனங்களை மாற்றிவிட்டு, லாரிகள், நான்கு சக்கர வாகனங்கள், பேருந்துகள் வாங்குவோருக்கு சில சலுகைகளை வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் வழங்க முடியும் என்றாா் நிதின் கட்கரி.

2021-22 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பழைய வாகனங்கள் ஒழிப்புக் கொள்கை கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதன்படி, 20 ஆண்டுகளுக்கு மேலான தனியாா் வாகனங்களுக்கும், 15 ஆண்டுகளுக்கு மேலான வா்த்தக வாகனங்களுக்கும் தகுதிச் சோதனை கட்டாயமாகும். இச்சோதனையை பூா்த்தி செய்யாத வாகனங்கள் ஒழிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments