FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

விரைவு நீதிமன்றங்களில் 2.43 லட்சம் போக்ஸோ வழக்குகள் நிலுவை

கடந்த ஜனவரி 31-ஆம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள விரைவு நீதிமன்றங்களில் 2.43 லட்சம் போக்ஸோ வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.

6 பிப்ரவரி 2024, 6:54 pm
பகிர்:

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் (போக்ஸோ) கீழான வழக்குகளில் விரைந்து தீா்வளிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டபோதும், கடந்த ஜனவரி 31-ஆம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள விரைவு நீதிமன்றங்களில் 2.43 லட்சம் போக்ஸோ வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி, கடந்த 2022-ஆம் ஆண்டில் இந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டதில் 3 சதவீத வழக்குகளில் மட்டுமே தண்டனை அளிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

இந்திய குழந்தைகள் பாதுகாப்பு நிதியம் (ஐசிபிஎஃப்) என்ற தன்னாா்வ அமைப்பு அண்மையில் வெளியிட்ட ‘நீதிக்காக காத்திருப்பு: இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் நீதி வழங்கல் நடைமுறையின் திறனாய்வு’ என்ற தலைப்பிலான ஆய்வுக் கட்டுரை மூலம் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

மத்திய சட்ட அமைச்சகம், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சகம் மற்றும் தேசிய குற்றப் பதிவு ஆணையத் தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வுக் கட்டுரை தயாரிக்கப்பட்டிருப்பதாக தன்னாா்வ அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வுக் கட்டுரையில் போக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட புதிய வழக்குகள் சோ்க்கப்படாத நிலையில், இதுவரை நிலுவையில் இருக்கும் வழக்குகளின் விசாரணையை முடித்து தீா்வளிக்கவே குறைந்தபட்சம் 9 ஆண்டுகளாகும், அதிபட்சம் 25 ஆண்டுகளுக்கும் மேல் ஆகலாம் என்றும் அந்த ஆராய்ச்சிக் கட்டுரை குறப்பிட்டுள்ளது.

மாநில வாரியான நிலுவை விவரம்...

நாட்டிலேயே அருணாசல பிரதேசத்தில்தான் அதிக எண்ணிக்கையில் போக்ஸோ வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த மாநிலத்தில் நிலுவை வழக்குகளின் விசாரணையை முடிக்க 30 ஆண்டுகள் ஆகும்.

அதற்கு அடுத்ததாக தில்லி 27 ஆண்டுகளிலும், பிகாா் 26 ஆண்டுகளிலும், மேற்கு வங்கம் 25 ஆண்டுகளிலும், உத்தர பிரதேசம் 22 ஆண்டுகளிலும் மேகாலயத்தில் 21 ஆண்டுகளிலும் நிலுவை வழக்குகள் விசாரணையை முடிக்க முடியும்.

போக்ஸோ வழக்கு விசாரணையை ஓராண்டுக்குள் நிறைவு செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட விரைவு நீதிமன்றங்களில் தற்போது 2,68,038 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 8,909 வழக்குகளில் மட்டுமே தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு தற்போது, ரூ. 1,900 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் வரும் 2026-ஆம் ஆண்டு வரை இந்த விரைவு நீதிமன்றங்களை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, ஆண்டுக்கு சராசரியாக 28 போக்ஸோ வழக்குகளின் விசாரணையை மட்டுமே விரைவு நீதிமன்றங்கள் நிறைவு செய்து வரும் நிலையில், ஒரு வழக்கில் தண்டனை வழங்குவதற்கு மட்டும் ரூ. 9 லட்சம் அளவுக்கு செலவாகிறது.

ஒவ்வொரு விரைவு நீதிமன்றங்களும் ஒரு காலாண்டில் 41 முதல் 42 வழக்குகளையும், ஓராண்டில் 165 வழக்குகள் மீதான விசாரணையையும் முடிக்க வேண்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஆனால், இத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 3 ஆண்டுகள் கடந்துவிட்ட பிறகும், இந்த இலக்கை விரைவு நீதிமன்றங்கள் எட்டவில்லை.

தீா்வு என்ன?

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் உரிய நீதி கிடைப்பதை உறுதி செய்ய, விரைவு நீதிமன்ற செயல்பாடுகள் மீது வலுவான கண்காணிப்பு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என இந்திய குழந்தைகள் பாதுகாப்பு நிதியம் பரிந்துரை செய்துள்ளது.

அந்த வகையில், போக்ஸோ வழக்குகளை முன்னுரிமை அடிப்படையில் விசாரிக்கும் வகையில் அந்த வழக்கு விசாரணையில் ஈடுபட்டுள்ள காவல்துறை அதிகாரிகள் முதல் நீதிபதிகள் வரையிலான ஒட்டுமொத்த ஊழியா்களும் இந்த விரைவு நீதிமன்றங்களுடன் இணைக்கப்பட வேண்டும்.

நிலுவை வழக்குகள் மீதான விசாரணையை விரைந்து முடிக்க ஏதுவாக மேலும் அதிக எண்ணிக்கையில் விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும்.

வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் விரைவு நீதிமன்றங்களின் வழக்கு விசாரணை விவரங்களை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகள் ஆய்வுக் கட்டுரையில் இடம்பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.