அதிவேகமாகப் பரவி வரும் புதிய வகை கரோனா! இப்படி ஒரு அறிகுறியா?
உலகம் முழுவதும் அதிவேகத்தில் பரவி வரும் புதிய வகை கரோனாவின் புதிய அறிகுறி பற்றி..
பிஜே.2.1 எனப்படும் புதிய வகை கோவிட்-19 வைரஸ், 2026-ஆம் ஆண்டு மே மாதம் கனடாவில் கண்டறியப்பட்ட நிலையில், அதிவேகமாக தற்போது உலகம் முழுவதும் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
எனினும், இதுவரை பரவி வந்த கரோனா வைரஸ்களுடன் ஒப்பிட்டால், அது மக்களிடயே மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துவது உறுதி செய்யப்படவில்லை என்றே கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதுவரை, பிஜே.2.1 பற்றி தெரிய வந்திருக்கும் தகவல்கள் அச்சமூட்டுவதாக இல்லை என்றாலும், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
வேகமாகப் பரவுகிறது!
இதன் முதல் அச்சமே, இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களிலேயே இந்த வைரஸ் வேகமாகக் பரவுகிறது, கண்டறியப்பட்ட சில மாதங்களில் பல கண்டங்களுக்கும் பரவியிருக்கிறது.
அதாவது, இந்த வகை வைரஸ், வட அமெரிக்காவின் பல பகுதிகளிலும், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இஸ்ரேல், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஸ்பெயினில், பல்வேறு பகுதிகளில் இந்த வைரஸ் தொடர்ந்து உள்ளூர் மக்களிடையே பரவி வருவதற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன. அமெரிக்காவில் இந்த வகை வைரஸ், மிக வேகமாகப் பரவி வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
கோவிட்-19 இன் புதிய வகை வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி வருவதால், இதன் அறிகுறிகள், பரவும் விதம், தீவிரத்தன்மை, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பற்றி விரிவாக ஆலோசனை நடத்தப்படுகிறது.
உலக சுகாதார அமைப்பு, பிஜே.2.1 எனும் இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவும் அபாயம் அதிகரித்து வருவதாகவும், மக்கள் மேற்கொள்ளம் சர்வதேசப் பயணங்கள் இதற்குக் காரணமாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
முன்பு மக்களிடையே பரவி வந்த எல்பி.8.1 வகை வைரஸ் உடன் ஒப்பிடுகையில், பிஜே.2.1 வகை செல்களை எளிதாக ஊடுருவுகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுதான், இந்த வைரஸ் மிக வேகமாகப் பரவுவதற்கான காரணம் என்று உறுதி செய்யப்படவில்லை. அதிவேகமாகப் பரவினாலும், அதி ஆபத்து நிறைந்த வைரஸ் என்று கண்டறியப்படாததே ஒரு நிம்மதியான செய்தியாக உள்ளது.
அறிகுறிகள் என்னென்ன?
மற்ற வகை கரோனா வைரஸ்களைக் காட்டிலும், இந்த பிஜே.2.1 வகை வைரஸ் பாதித்தவர்களுக்குக் கடுமையான தொண்டை வலி இருப்பதாகவும், மற்ற வைரஸ்களில் காணப்படாத ஒரு புதிய அறிகுறியாக தலைச்சுற்றல் அதிகமாக இருப்பதாகவும் இது நீண்ட காலத்துக்கு நீடிப்பதாகவும் மருத்துவர்கள் கூறியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வழக்கமான காய்ச்சல், தொண்டை வலி, இருமல், சளி, மூக்கடைப்பு, தலைசுற்றல், தலைவலி, தசைகளில் வலி போன்றவையே இதன் அறிகுறிகள் என்று கூறப்பட்டுள்ளது.
இது மிகவும் அபாயகரமானதா?
இதுவரை இல்லை என்பதே பதிலாக உள்ளது. நவ. 8ஆம் தேதி தரவுகளின்படி, இந்த வைரஸ் பாதித்தவர்கள் உடல்நிலை கடுமையாக பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலை ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
தற்போதைய நிலையில், இது கவலையை ஏற்படுத்தும் ஒரு வைரஸ் ஆக இனங்காணப்பட்டு, கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை!
ஏற்கனவே, கரோனா வைரஸிலிருந்து தற்காத்துக் கொள்ள எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளும் இதற்கும் பொருந்தும்.