உயிர்க்கரியின் புதிய உலகம்
ஒரு கைப்பிடி அளவு கருப்பு நிறப் பொருள்.
ஒரு கைப்பிடி அளவு கருப்பு நிறப் பொருள். பார்ப்பதற்குச் சாதாரணக் கரியைப் போலத்தான் தெரியும். ஆனால், அதற்குள் மண்ணைக் காக்கும் சக்தியும், விவசாயக் கழிவுகளுக்கு மதிப்புச் சேர்க்கும் வாய்ப்பும், கார்பனை நிலைநிறுத்தும் திறனும் ஒளிந்திருக்கிறது. அதுதான் உயிர்க்கரி! (பயோசார்).
உலகம் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்னைகளில் ஒன்று விவசாயக் கழிவுகளை எவ்வாறு பயனுள்ளதாக மாற்றுவது என்பதாகும். நெல் உமி, வைக்கோல், தேங்காய் ஓடு, மரக்கிளைகள், கரும்புச் சக்கை போன்றவை முறையாக நிர்வகிக்கப்படாவிட்டால், அவைக் கழிவாக மாறுகின்றன. ஒருசில இடங்களில் அவை எரிக்கப்படுவதால் காற்று மாசும் ஏற்படுகிறது. இந்தக் கழிவுகளை அறிவியல் தொழில்நுட்பத்தின் மூலம் உயிர்க்கரியாக மாற்ற முடியும்.
கரியாக மாறும் கழிவு
Advertisement
Advertisement
உயிர்க்கரி என்பது தாவரப் பொருள்களை முழுமையாக எரிக்காமல், குறைந்த அளவு ஆக்சிஜன் உள்ள சூழலில் அதிக வெப்பத்துக்கு உள்படுத்தி உருவாக்கப்படும் கார்பன் நிறைந்த பொருள். இந்தச் செயல்முறையில் தாவரப் பொருளின் தன்மை மாறுகிறது. கிடைக்கும் உயிர்க்கரியை அதன் நுண்துளை அமைப்பு, வேதியியல் பண்புகளால் மண்ணிலும் சுற்றுச்சூழல் சார்ந்தும் பயன்படுத்தப்பட முடியும்.
மண்ணுக்கு ஒரு புதிய துணை
தாவரக் கழிவுகள், தேங்காய் ஓடுகளைக் குறைந்த ஆக்சிஜன் சூழலில் சுட்டுத் தயாரிக்கப்படும் இந்த உயிர்க்கரி, மண்ணில் நீரும் ஊட்டச்சத்துகளும் தங்குவதற்கு உதவக்கூடும். நுண்துளைகள் கொண்ட உயிர்க்கரி, மண்ணில் உள்ள ஈரப்பதத்தை நீண்ட நேரம் பிடித்து வைக்கிறது. பயிர்களுக்கு நன்மையளிக்கும் பாக்டீரியாக்கள், பூஞ்சான்கள் பெருகுவதற்கும் சிறந்த வாழிடமாகச் செயல்படுகிறது. இவை இயற்கை, ரசாயன உரங்கள் மழைநீரில் அடித்துச் செல்லப்படாமல், மண்ணிலேயே தங்கிச் செடிகளுக்குக் கிடைக்கவும் செய்கிறது.
கழிவை எரிப்பதற்குப் பதிலாக வளமாக்கலாம்
விவசாயக் கழிவுகளைத் திறந்தவெளியில் எரிப்பது காற்றின் தரத்தைப் பாதிக்கும். அதற்கு மாற்றாக, பொருத்தமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அந்தச் சாம்பல் கழிவுகளை உயிர்க்கரியாக மாற்றினால் கழிவுக்கு மதிப்பு கிடைக்கிறது. சரியான முறையில் பயன்படுத்தப்பட்டால், அதுவே மண்ணுக்குத் துணையாகும் ஒரு வளமாக மாறக்கூடும்.
தாவரங்கள் வளரும்போது வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடைப் பயன்படுத்துகின்றன. அந்தத் தாவரப் பொருள்களில் உள்ள கார்பனின் ஒரு பகுதியை உயிர்க்கரியாக மாற்றி மண்ணில் சேர்ப்பதன் மூலம், கார்பனை நீண்ட காலம் நிலைநிறுத்தும் வாய்ப்பு உருவாகிறது. இதனால் புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் உயிர்க்கரி ஆராயப்படுகிறது. வயலில் போடப்படும் சிறிய அளவு கருப்பு நிறப் பொருள், பூமியின் மிகப் பெரிய பிரச்னைகளில் ஒன்றான கார்பன் அதிகரிப்பைக் குறைக்கும் முயற்சியில் பங்களிப்பை வழங்கக்கூடும்.
மருத்துவத்திலும் கரியின் இன்னொரு முகம்
சாதாரண உயிர்க்கரியும், மருத்துவத்தில் பயன்படும் செயல்படுத்தப்பட்ட கரியும் (ஆக்டிவேட்டட் சார்கோல்) இரண்டும் ஒன்றல்ல. செயல்படுத்தப்பட்ட கரி (ஆக்டிவேட்டட் சார்கோல்) என்பது அதிக நுண்துளைகள் கொண்டதாகத் தயாரிக்கப்படும் சிறப்புப் பொருள்.
தற்செயலாக நச்சுப் பொருள்களையோ அல்லது அளவுக்கு அதிகமான மருந்துகளையோ உள்கொண்டவர்களுக்கு, வயிற்றில் உள்ள விஷத்தை உறிஞ்சி வெளியேற்ற இது மருத்துவர்களின் மேற்பார்வையில் அவசரகால மருந்தாகப் பயன்படுகிறது. வயிற்றில் ஏற்படும் அதிகப்படியான வாயு, உப்புசம், நச்சுகளை வெளியேற்றி குடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது. எனவே, மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் இந்தச் செயல்படுத்தப்பட்ட கரியைச் சாதாரண உயிர்க் கரியுடன் குழப்பக் கூடாது.
அழகுச் சாதனங்களிலும் கருப்பு நிறம்
ஒப்பனைப் பொருள்கள், முகக் கவசங்கள், சோப்புகள், முகப் பூச்சுகளில் இது சேர்க்கப்படுகிறது. சருமத்தின் ஆழத்தில் இருக்கும் தூசி, அதிகப்படியான எண்ணெய், கரும்புள்ளிகளை உறிஞ்சி எடுத்து முகத்துக்குத் துரிதமான பொலிவைத் தருகிறது. சில பற்பசைகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது.
பற்களில் படிந்துள்ள கறைகளை நீக்கவும், வாயில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்கவும் பாரம்பரிய மரக்கரிப் பொடி இன்றும் பயன்படுகிறது. இருப்பினும், கரி உள்ளது என்பதால், அந்தப் பொருள் அனைவருக்கும் சிறந்தது என்று கூற முடியாது. ஒவ்வொருவரின் தோல் தன்மையும் வேறுபடும் என்பதால், அழகுச் சாதனங்களைத் தேர்ந்தெடுக்கும்போதும் பல் பராமரிப்பிலும் தகுந்த ஆலோசனையைப் பின்பற்றுவது பாதுகாப்பானது.
கருப்பு நிறத்தில் பசுமையான எதிர்காலம்
பழங்காலத்தில் நமது முன்னோர் அடுப்புக்கரியையும் சாம்பலையும் மண்ணுக்கும் பல்லுக்கும் பயன்படுத்தியது வெறும் மூடநம்பிக்கையல்ல; அது அறிவியல்பூர்வமான வாழ்வியல் முறை என்பதை இன்றைய நவீன உலகமும் ஏற்றுக்கொண்டுள்ளது. ஒருகாலத்தில் 'எரித்துவிட வேண்டிய கழிவு' என்று பார்த்த பொருளையே இன்று அறிவியல் 'பயன்படுத்தக் கூடிய வளம்' என்றாகிவிட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.