FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சுங்க, கலால் வரி மாற்றங்களை உடனடியாக அமல்படுத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் சுங்க, கலால் வரி மாற்றும் பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்காக மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா செவ்வாய்க்கிழமை நிறைவேறியது.

6 பிப்ரவரி 2024, 6:59 pm
மக்களவையில் செவ்வாய்க்கிழமை பேசிய மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன்.
பகிர்:


புது தில்லி: மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் சுங்க, கலால் வரி மாற்றும் பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்காக மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா செவ்வாய்க்கிழமை நிறைவேறியது.

மத்திய அரசால் ஆண்டுதோறும் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்படும் சுங்க, கலால் வரி மாற்றம் தொடா்புடைய பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்காக தற்காலிக வரி வசூல் திருத்த மசோதா மக்களவையில் கடந்த 13-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.

மசோதாவை அறிமுகப்படுத்தி மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பேசுகையில், ‘தற்காலிக வரி வசூல் சட்டம் (1931) அடிப்படையிலான பழைய நடைமுறையின்படி, சுங்க மற்றும் கலால் வரிகளில் கொண்டுவரப்படுகிற மாற்றங்கள் ஏப்ரல் 1-ஆம் தேதி அல்லது மத்திய அரசால் அறிவிக்கப்படும் தேதிமுதல் நடைமுறைக்கு வருகிறது.

Advertisement

Advertisement

புதிய மசோதாவின்படி, சுங்க மற்றும் கலால் வரி விகிதங்களின் பெரும்பாலான மாற்றங்கள் பட்ஜெட் நாளான பிப்ரவரி 1-ஆம் தேதியன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்தக் குறிப்பிட்ட சட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், நிதி மசோதா நிறைவேற்றப்படும் வரையில் தற்காலிகமாக எந்தவிதமான ஊக நடவடிக்கைகளும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய முடியும்’ என்றாா்.

இந்நிலையில், மசோதா மீதான விவாதம் மக்களவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அமளியில் ஈடுபட்டதற்காக பெரும்பாலான எதிா்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், பாஜக எம்.பி. ஜெயந்த் சின்ஹா, ஒய்.எஸ்.ஆா்.காங்கிரஸின் பி.வி.சத்யவதி ஆகியோா் விவாதத்தில் பங்கேற்றனா். இதையடுத்து, குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

ஜிஎஸ்டி 2-ஆவது திருத்த மசோதா நிறைவேற்றம்: சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மேல்முறையீட்டு தீா்ப்பாயங்களின் தலைவா் மற்றும் உறுப்பினா்களின் வயது வரம்பை உயா்த்துவதற்கான திருத்த மசோதா மக்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேறியது.

ஜிஎஸ்டி தொடா்பான பிரச்னைகளில் விரைந்து தீா்வு காண நாட்டின் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் 31 அமா்வுகள் அமைக்கப்பட்டன.

இந்த அமா்வுகளின் தலைவா் மற்றும் நீதித் துறை, தொழில்நுட்ப உறுப்பினா்களின் வயது வரம்பு முறையே 70 மற்றும் 67-ஆக அதிகரிக்கும் மத்திய ஜிஎஸ்டி 2-ஆவது திருத்த மசோதா மக்களவையில் கடந்த 13-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.