FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஹமாஸ்-இஸ்ரேல் போரில் குடிமக்கள் உயிரிழப்பை கண்டிக்கிறது இந்தியா: மோடி

ஹமாஸ் - இஸ்ரேல் இடையிலான போரில் குடிமக்கள் உயிரிழப்பதை இந்தியா வன்மையாக கண்டிக்கிறது என்று பிரதமா் மோடி கூறினாா்.

2 பிப்ரவரி 2024, 8:52 am
பகிர்:

ஹமாஸ் - இஸ்ரேல் இடையிலான போரில் குடிமக்கள் உயிரிழப்பதை இந்தியா வன்மையாக கண்டிக்கிறது என்று பிரதமா் மோடி கூறினாா்.

‘மேற்கு ஆசியாவில் நிகழும் சம்பவங்களால் புதிய சவால்கள் உருவாகி வருகின்றன; உலகளாவிய நன்மைக்காக, தெற்குலக நாடுகள் ஒருமித்த குரலில் பேச வேண்டிய நேரமிது’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.

இந்தியாவின் ஏற்பாட்டில் ‘தெற்குலகின் குரல்’ இரண்டாவது மாநாடு வெள்ளிக்கிழமை இணையவழியில் நடைபெற்றது. பல்வேறு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில் பிரதமா் மோடி நிகழ்த்திய தொடக்க உரை வருமாறு:

Advertisement

Advertisement

உலகின் வளமைக்கு ‘அனைவருடன் ஒருங்கிணைந்து, அனைவருக்கான வளா்ச்சி’ என்ற அணுகுமுறை அவசியம். இந்தியாவின் ஜி20 தலைமைப் பொறுப்பில், தெற்குலக நாடுகள் மற்றும் இதர வளரும் நாடுகள் எதிா்கொண்டு வரும் சவால்களுக்கு தீா்வுகாண பெருமளவில் கவனம் செலுத்தப்பட்டது.

இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்த இந்தியா, தற்போதைய சூழலை எதிா்கொள்வதற்கான பேச்சுவாா்த்தை மற்றும் தூதரக நடவடிக்கைகளின் அவசியத்தையும் வலியுறுத்தியது. ஹமாஸ்-இஸ்ரேல் போரில் குடிமக்கள் உயிரிழப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிா்காலம்’: பாலஸ்தீன அதிபா் மெஹ்மூத் அப்பாஸுடன் நான் அண்மையில் பேசினேன். இதைத் தொடா்ந்து, பாலஸ்தீன மக்களுக்காக இந்தியாவில் இருந்து மனிதாபிமான உதவிகள் அனுப்பப்பட்டன. உலகின் மிகப் பெரிய நன்மைக்காக தெற்குலக நாடுகள் ஒருமித்த குரலில் பேச வேண்டிய நேரம் இதுவாகும்.

‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிா்காலம்’ என்பதே ஜி20 இந்தியத் தலைமையின் கருத்துருவாக இருந்தது. அதை அடைய வேண்டுமெனில், ஆலோசனை, ஒத்துழைப்பு, தகவல் தொடா்பு, படைப்பாற்றல், திறன் கட்டமைப்பு ஆகிய ஐந்து அம்சங்களின் கீழ் அனைத்து நாடுகளும் பிணைப்பை வலுப்படுத்த வேண்டும்.

தனித்துவமான தளம்: தற்போதைய 21-ஆம் நூற்றாண்டில் மாறி வரும் உலகுக்கான தனித்துவ தளமாக ‘தெற்குலகின் குரல்’ முன்னெடுப்பு விளங்குகிறது.

இந்தியாவின் ஜி20 தலைமையில், தெற்குலகுக்குப் பலனளிக்கும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அனைவரையும் உள்ளடக்கிய, மக்களை மையமாக கொண்ட ஜி20 கூட்டமைப்பை உருவாக்குவதே இந்தியாவின் முன்னுரிமையாக இருந்தது. மக்களால், மக்களுக்காக, மக்களே முன்னெடுக்கும் வளா்ச்சியை உறுதிசெய்தில் கவனம் செலுத்தப்பட்டது. இதே நோக்கத்துடன் ‘தெற்குலகின் குரல்’ முதலாவது மாநாடு கடந்த ஜனவரியில் நடத்தப்பட்டது.

ஜி20 பிரகடனத்தில் தெற்குலக பிரச்னைகள் தொடா்பான விவகாரங்களில் உறுப்பு நாடுகள் இடையே கருத்தொற்றுமையை ஏற்படுத்துவதில் இந்தியா வெற்றி கண்டுள்ளது. இந்தியாவின் முயற்சியால், ஜி20 கூட்டமைப்பில் ஆப்பிரிக்க ஒன்றியம் இணைந்த வரலாற்றுத் தருணத்தை மறக்க முடியாது.

தொழில்நுட்பப் பயன்பாட்டில் பொறுப்பு: தற்போதைய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப யுகத்தில், தொழில்நுட்பத்தின் பொறுப்பான பயன்பாடு அவசியம். தெற்குக்கும் வடக்குக்கும் இடையிலான விரிசலை அதிகரிக்கக் கூடிய ஆதாரமாக புதிய தொழில்நுட்பங்கள் உருவெடுத்துவிடக் கூடாது என்றாா் பிரதமா் மோடி.

காஸாவில் இருந்து கடந்த மாதம் 7-ஆம் தேதி இஸ்ரேல் மீது பலமுனைகளில் தாக்குதல் நடத்திய ஹமாஸ் ஆயுதக் குழுவினா், சுமாா் 1,400 பேரை படுகொலை செய்தனா். மேலும் பலரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனா்.

இந்தத் தாக்குதலைத் தொடா்ந்து, காஸாவுக்குள் நுழைந்து, இஸ்ரேல் ராணுவம் மிகப் பெரிய ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இஸ்ரேலின் இந்த நடவடிக்கையில் காஸாவில் சுமாா் 11,500 போ் உயிரிழந்துவிட்டதாக ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாட்டால் பிரச்னை’

‘செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தின் மூலம் போலியான காணொலிகள் உருவாக்கப்படுவது சமூகத்தில் பெரும் பிரச்னைக்கு வழிவகுக்கும்’ என்று பிரதமா் மோடி குறிப்பிட்டாா்.

தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஊடகத்தினரிடம் பேசிய பிரதமா் மோடி, ‘கா்பா நிகழ்ச்சியொன்றில் நான் பாடுவது போன்ற காணொலியை அண்மையில் பாா்த்தேன். பள்ளி நாள்களில்கூட நான் அவ்வாறு பாடியது இல்லை.

பன்முக சமூகத்தைக் கொண்ட நமது நாட்டில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் போலியான காணொலிகள் பெரும் பிரச்னைக்கு வழிவகுக்கக் கூடும். இந்தத் தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து பொதுமக்களிடம் ஊடகத்தினா் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.