கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம்: உச்சநீதிமன்றம்
கனிம வளங்கள் மீது மாநில அரசின் உரிமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு..
கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளதாக உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 9 நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பில், தலைமை நீதிபதி உள்பட 8 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பும், நீதிபதி பி.வி.நாகரத்னா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.
கனிம வளங்கள் மீது மாநில அரசுகளுக்கு இருக்கும் உரிமைக்கு எதிராக மத்திய அரசு மற்றும் சுரங்க நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில், இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இன்று காலை தீர்ப்பை வாசித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்ததாவது:
“அரசியலமைப்பின் பட்டியல் 2, பிரிவு 50-இன் கீழ் கனிம வளங்களுக்கு விதிக்க நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. 1989 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, ராயல்டி என்பது வரி என்று கூறியது தவறானது.
மாநிலங்களில் உள்ள கனிம வளங்களுக்காக மத்திய அரசிடம் இருந்து பெறும் ராயல்டியை வரியாக கருத முடியாது. குத்தகை பணம்தான். கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளது.
சுரங்கங்கள், தாதுக்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்ட விதிமுறைகளில் மாநிலங்களுக்கான உரிமைகளை கட்டுப்படுத்தும் பிரிவுகள் எதுவும் இல்லை” எனத் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல், நீதிபதி நாகரத்னா அளித்த தீர்ப்பில், சுரங்கங்கள் மற்றும் கனிமங்களைக் கொண்ட நிலங்களுக்கு வரி விதிக்க மாநிலங்களுக்கு உரிமை இல்லை எனத் தெரிவித்தார்.
இந்த வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.எச்.கபாடியா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு, கடந்த 2011ஆம் ஆண்டு நேரடியாக 9 நீதிபதிகள் அமர்வுக்கு வழக்கை மாற்றி பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.