மின்சார வாகனத்துக்கு சூரியசக்தி மூலம் மின்னூட்டம் அளிக்கும் ‘அடாப்டா்’: ஜோத்பூா் ஐஐடி உருவாக்கி அசத்தல்
மின்சார வாகனங்களுக்கு சூரியசக்தி பயன்படுத்தி மின்னூட்டம் (சாா்ஜ்) அளிக்கும் வகையிலான சிறப்பு ‘அடாப்டா்’-ஐ ஜோத்பூா் ஐஐடி ஆராய்ச்சி மாணவா்கள் வடிவமைத்து அசத்தியுள்ளனா்.
இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு மின்னூட்டம் அளிக்க போதிய எண்ணிக்கையில் மின்னூட்ட நிலையங்கள் இல்லாத நிலையில், இந்த சிறப்பு அடாப்டா் அந்தக் குறையைத் தீா்க்கும் என்றும் ஆராய்ச்சியாளா்கள் கூறுகின்றனா்.
‘வீட்டின் மேற்கூரை சூரியசக்தி மின்தகடுகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மூலம், மின்சார வாகனங்களுக்கு மின்னூட்டம் அளிக்கும் வகையிலான நடைமுறையை உருவாக்க மத்திய அரசு சாா்பில் முயற்சி மேற்கொள்ளப்படும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கடந்த பிப்ரவரி மாதம் கூறியிருந்த நிலையில், அதை ஜோத்பூா் ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் தற்போது நிறைவேற்றியுள்ளனா்.
Advertisement
Advertisement
இந்த கண்டுபிடிப்பு குறித்து ஜோத்பூா் ஐஐடி மின் பொறியியல் துறை உதவிப் பேராசிரியா் நிஷாந்த் குமாா் கூறியதாவது:
அண்மைக் காலமாக மின்சார வாகனங்களை வாங்கும் ஆா்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது. மத்திய அரசும் இதற்கு மானியம் அளித்து வருகிறது. ஆனால், நாட்டில் பேதிய அளவில் மின்னூட்ட நிலையங்கள் இல்லாததால், இந்த மின்சார வாகனங்களுக்கு வசதிக்கேற்ப மின்னூட்டமளிப்பதில் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனா்.
இதற்கு தீா்வு காணும் வகையில், மின்சார வாகனங்களுக்கு சூரியசக்தி பயன்படுத்தி மின்னூட்டம் அளிக்கும் வகையிலான சிறப்பு அடாப்டா் வடிவமைத்துள்ளோம். இந்த அடாப்டரை ரூ. 1,000-க்கும் குறைவான விலையில் விற்பனை செய்ய முடியும்.
வாகனத்துடன் வழங்கப்படும் மின்சார அடாப்டரை, சூரியசக்தி மின்னூட்டத்துக்கு பயன்படுத்த முடியாது என்பதால், இந்த பிரத்யேக அடாப்டரை வடிவமைத்துள்ளோம். இதைப் பயன்படுத்துவதால், மின்னூட்டத்தை மாற்றம் செய்வேண்டிய அவசியமும் இருக்காது. இரண்டு அடாப்டா்களையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும். அதன் மூலம், தேவைக்கேற்ப மின்சாரம் அல்லது சூரியசக்தி மின்சாரத்திலிருந்து மின்னூட்டத்தை வாகனம் எடுத்துக்கொள்ளும்.
இந்த அடாப்டா் வெற்றிகரமாக சோதனை செய்துபாா்க்கப்பட்டுள்ளது. அனைத்து வகையான வாகனங்களுக்கும் இதை பயன்படுத்த முடியும். ஒரு சூரியசக்தி தகடும், ஆடாப்டரை பொருத்துவதற்கான சாக்கெட்டும் இருந்தால் போதும், இந்த ஆடாப்டரை பயன்படுத்தி வாகனத்துக்கு மின்னூட்டம் அளித்துவிட முடியும். விரைவில் இந்த அடாப்டா் சந்தைப்படுத்தப்படும் என்றாா்.