3 கோடி வீடுகள் கட்ட நிதி: முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்
பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தில் 3 கோடி வீடுகள்கட்ட நிதியுதவி அளிப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற முதல் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தில் 3 கோடி வீடுகள்கட்ட நிதியுதவி அளிப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற முதல் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
18}ஆவது மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றார். அவருடன் 71 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்றது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான முதலாவது மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த கேபினட் அமைச்சர்கள் உள்பட அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது:
"பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தில் பயனடைய தகுதி பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைக் கருத்தில்கொண்டு, புதிதாக 3 கோடி கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீடுகளைக் கட்ட அரசு நிதியுதவி அளிப்பதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது' என்றனர்.
தகுதியுள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புற குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகளைக் கட்ட நிதியுதவி அளிப்பதற்கு கடந்த 2015-16-ஆம் ஆண்டுமுதல் பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தை (பிஎம்ஏஒய்) மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின்கீழ், கடந்த 10 ஆண்டுகளில் தகுதியுள்ள ஏழைக் குடும்பங்களுக்கு மொத்தம் 4.21 கோடி வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. இத்திட்டத்தின்கீழ் கட்டப்படும் அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறைகள், சமையல் எரிவாயு இணைப்பு, மின் இணைப்பு மற்றும் குழாய் மூலம் நீர் இணைப்பு போன்ற அடிப்படை வசதிகள் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பிற திட்டங்களின் மூலம் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சம் ரூ.2.75 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது.
விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி நிதி விடுவிப்பு
: விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின்கீழ் 17}ஆவது தவணையாக ரூ.20,000 கோடியை விடுவிப்பதற்கான கோப்பில் பிரதமர் நரேந்திர மோடி முதல் கையொப்பமிட்டார்.
இந்த நிதியின் மூலம் நாடு முழுவதும் 9.3 கோடி விவசாயிகள் பலனடைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வருகை தந்த மோடி, தனது இருக்கையில் அமர்ந்து பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர், பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின்கீழ், 17-ஆவது தவணையாக ரூ.20,000 கோடியை விடுவிப்பதற்கான கோப்பில் முதல் கையொப்பமிட்டார்.
"விவசாயிகளின் நலனைக் காக்க எனது அரசு உறுதிபூண்டுள்ளது. எனவே, விவசாயிகள் நலன் தொடர்பான கோப்பில் முதல் கையொப்பமிட்டுள்ளேன். வரும் காலங்களில் விவசாயிகள் மற்றும் வேளாண் துறைக்காக மேலும் பணியாற்ற விரும்புகிறோம்' என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
2019, பிப்ரவரியில் தொடங்கப்பட்ட பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின்கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி மூன்று தவணைகளாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் விமர்சனம்: "மக்களவைத் தேர்தல் காரணமாக, ஒரு மாதம் தாமதம் ஏற்பட்ட நிலுவை நிதியை விடுவிக்கவே, மோடி இப்போது கையொப்பமிட்டுள்ளார்; மாறாக, விவசாயிகளுக்கான எந்த சிறப்பு நடவடிக்கையையும் அவர் மேற்கொள்ளவில்லை.
உண்மையிலேயே விவசாயிகள் மீது அவருக்கு அக்கறை இருந்தால், விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்குவதோடு, விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டும்' என்று காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார்.