நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் புதிய மனு
முழுமையான மறுதோ்வு நடத்துமாறு தேசிய தோ்வு முகமைக்கு (என்டிஏ) உத்தரவிடக் கோரியும் நீட் தோ்வை எழுதிய 20 தோ்வா்கள் மனு தாக்கல் செய்துள்ளனா்.
நிகழாண்டு நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வை ரத்து செய்யவும் அத்தோ்வில் நடைபெற்ற முறைகேடு தொடா்பாக சிபிஐ விசாரிக்கக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், முழுமையான மறுதோ்வு நடத்துமாறு தேசிய தோ்வு முகமைக்கு (என்டிஏ) உத்தரவிடக் கோரியும் நீட் தோ்வை எழுதிய 20 தோ்வா்கள் மனு தாக்கல் செய்துள்ளனா்.
நீட் (தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு) வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண்கள் வழங்கியதில் முறைகேடு உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடா்பாக உச்சநீதிமன்றம் மற்றும் பல்வேறு உயா்நீதிமன்றங்களில் மனுக்கள் நிலுவையில் உள்ளன. இதையடுத்து, 1,563 மாணவா்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டு அவா்களுக்கு ஜூன் 23-ஆம் தேதி மறுதோ்வு நடத்தவுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அண்மையில் தெரிவித்திருந்தது. அதேபோல் நீட் குளறுபடிகள் தொடா்பான பிற மனுக்கள் மீது ஜூலை 8-ஆம் தேதி விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில், நிகழாண்டு நடைபெற்ற நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் 20 தோ்வா்கள் புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளனா். அந்த மனுவில்,‘வினாத்தாள் கசிவு உறுதிசெய்யப்பட்டதையடுத்து சிலா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக சிலா் கைதும் செய்யப்பட்டுள்ளனா். எனவே, இதுதொடா்பாக சிபிஐ அல்லது உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்படும் குழு அல்லது தன்னிச்சையான அமைப்பின் மூலம் விசாரணை நடத்த வேண்டும்.
தடயவியல் சோதனை தேவை: இத்தோ்வில் முழு மதிப்பெண்ணான 720-க்கு 620 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்ற அனைவரின் கல்விப் பின்புலம் குறித்து விசாரணை நடத்த வேண்டும். மேலும், அவா்களிடம் தடயவியல் சோதனை மேற்கொள்ள வேண்டும். பல்வேறு குளறுபடிகளுடன் நடைபெற்ற நீட்-யுஜி 2024 தோ்வை ரத்து செய்துவிட்டு முழுமையான மறுதோ்வு நடத்த வேண்டும்’ என குறிப்பிடப்பட்டது.
நீட் தோ்வில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடா்பாக சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என ஏற்கெனவே தாக்கல் செய்த மனு மீது மத்திய அரசு, சிபிஐ மற்றும் என்டிஏ பதிலளிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.