எவற்றுக்கெல்லாம் ஜிஎஸ்டி விலக்கு?
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்துள்ள பேட்டி.
ஜிஎஸ்டி கவுன்சிலின் 53வது ஆலோசனைக் கூட்டம் புதுதில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று(ஜூன் 22) நடைபெற்றது. அதன்பின் செய்தியாளர்களுடன் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருப்பதாவது, ரயில் நிலைய நடைமேடை சீட்டுகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து (ஜிஎஸ்டி) விலக்கு அளிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
பயணிகள் ஓய்வெடுக்கும் அறைகள், ரயில் நிலைய நடைமேடைகளில் பேட்டரி வாகனங்கள் உள்ளிட்ட சேவைளுக்கும் ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
தங்கும் விடுதிகளுக்கும் வரிச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாணவர்கள் தங்கிப் படிப்பதற்காக அவர்களின் வசதிக்காக கல்வி நிலையங்களைத் தவிர்த்து, வெளியில் செயல்படும் மாணவர் விடுதிகள் மற்றும் மாணவர்களுக்காக செயல்படும் உணவகங்கள் ஆகியவற்றுக்கும் ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். சராசரியாக ஒரு மாதத்துக்கு ஒரு நபருக்கு ரூ. 20,000 வரை கட்டணம் வசூலிக்கும் விடுதிகளுக்கு இந்த வரி விலக்கு பொருந்தும். மேற்கண்ட மாணவர்கள் குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு அங்கு தங்கியிருப்பதும் கட்டாயம்.
பால் வணிகர்கள் பயனடையும் வகையில், அனைத்து பால் கேன்களுக்கும் ஒரே சீராக 12 சதவீதமாக ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட வேண்டுமெனவும் கவுன்சில் பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு தீர்மானிக்கப்படுமென தெரிவித்துள்ளார்.
சிறு, குறு வரி செலுத்துவோர் பயன்பெறும் வகையில், ஜிஎஸ்டி வரி திருப்பிச் செலுத்துதல் - 4ஆம் படிவத்தை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை ஏப்ரல் 30இல் இருந்து, ஜூன் 30 வரை நீட்டிக்க கவுன்சில் பரிந்துரைத்துள்ளதாகவும், 2024-25 நிதியாண்டு முதல் இந்த நடைமுறை செயல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.