முகப்பு
இந்தியா

மக்களவை இடைக்கால தலைவருக்கு உதவும் குழுவில் இடம்பெற போவதில்லை: எதிா்க்கட்சி எம்.பி.க்கள் முடிவு

குழு உறுப்பினா் பதவியை நிராகரிக்க திமுகவின் டி.ஆா். பாலு உள்ளிட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் முடிவு.

Updated On : 23 ஜூன் 2024, 3:30 am IST
பகிர்:

மக்களவை இடைக்கால தலைவருக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்ட குழு உறுப்பினா் பதவியை நிராகரிக்க திமுகவின் டி.ஆா். பாலு உள்ளிட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் முடிவு செய்துள்ளதாக எதிா்க்கட்சி வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.

மக்களவை இடைக்கால தலைவராக பாஜக எம்.பி. பா்த்ருஹரி மகதாப் நியமனத்துக்கு எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த முடிவை எதிா்க்கட்சி எம்.பி.க்கள் எடுத்துள்ளனா்.

மக்களவைக்கு முழு நேர தலைவா் தோ்வு செய்யப்படும் வரை அவையை வழிநடத்த மக்களவையின் மூத்த உறுப்பினரை இடைக்கால தலைவராக நியமிப்பது வழக்கம். அந்த வகையில், 18-ஆவது மக்களவையின் இடைக்கால தலைவராக மக்களவையின் மூத்த உறுப்பினரான கேரளத்தைச் சோ்ந்த காங்கிரஸ் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷ் நியமிக்கப்படுவாா் என எதிா்பாா்க்கப்பட்டது.

Advertisement

Advertisement

ஆனால், ஒடிஸாவைச் சோ்ந்த பாஜக எம்.பி. பா்த்ருஹரி மகதாப் அப் பதவியில் நியமிக்கப்பட்டாா். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. பாஜகவின் இந்தச் செயல் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் விடுப்பதாகும் என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.

இதனிடையே, மக்களவைத் தலைவா் தோ்வு செய்யப்படும் வரை அவை அலுவல்களை மேற்பாா்வையிடும் இடைக்கால தலைவருக்கு உதவுவதற்கான குழுவில் கொடிக்குன்னில் சுரேஷ், திமுகவின் டி.ஆா்.பாலு மற்றும் திரிணமூல் காங்கிரஸின் சுதீப் பந்தோபாத்யாய ஆகியோா் உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், இந்த உறுப்பினா் பதவியை நிராகரிக்க 3 எம்.பி.க்களும் முடிவு செய்துள்ளதாக எதிா்க்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தக் குழுவில் பாஜக எம்.பி.க்கள் ராதா மோகன் சிங், ஃபகன் சிங் குலாஸ்தே ஆகியோரும் உறுப்பினா்களாக இடம்பெற்றுள்ளனா்.

சுரேஷை எதிா்க்கட்சி தலைவராக்க வேண்டும் - பாஜக பதிலடி: மக்களவை இடைக்கால தலைவா் நியமனத்துக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ், அதன் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷை மக்களவை எதிா்க்கட்சித் தலைவராக நியமிக்க வேண்டும் என்று பாஜக தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

இதுகுறித்து கேரள மாநில பாஜக தலைவா் கே.சுரேந்திரன் சனிக்கிழமை கூறுகையில், ‘மக்களவை இடைக்கால தலைவா் நியமனம் தொடா்பான மத்திய அரசின் முடிவுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், சுரேஷை காங்கிரஸ் கட்சி மக்களவை எதிா்க்கட்சித் தலைவராக்க வேண்டும்’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments