திருவேற்காடு கருமாரியம்மனின் 8 பவுன் நகை திருட்டு: அர்ச்சகர் மீது வழக்குப் பதிவு
சென்னை திருவேற்காடு கருமாரியம்மன் அம்மன் கோயிலில் அம்மன் கழுத்தில் இருந்து 8 சவரன் தாலி செயினை திருடிய வழக்கில் தலைமறைவாக உள்ள அர்ச்சகரை திருவேற்காடு போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
சென்னை: சென்னை திருவேற்காடு கருமாரியம்மன் அம்மன் கோயிலில் அம்மன் கழுத்தில் இருந்த 8 சவரன் தாலி செயினை திருடிய வழக்கில் தலைமறைவாக உள்ள அர்ச்சகரை திருவேற்காடு போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் சென்னை அடுத்த திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலும் ஒன்றாகும். நாள்தோறும் இந்த கோயிலுக்கு தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து மட்டுமின்றி ஆந்திரம், கர்நாடகம், புதுச்சேரி உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், உற்சவர் அம்மன் கழுத்தில் அணிந்திருந்த எட்டு பவுன் தாலி செயினை காணவில்லை என கடந்த 5 ஆம் தேதி கோயிலில் பணிபுரியும் அர்ச்சகர்கள் கோயில் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து கோயில் அதிகாரிகள் விசாரித்த போது அம்மன் கழுத்தில் இருந்த எட்டு பவுன் தாலி செயினை தற்காலிக அர்ச்சகராகப் பணிபுரிந்த சண்முகம் (எ) பாபு (40) திருடி அடகு வைத்தது தெரியவந்தது. பின்னர் போலீசில் புகார் அளிப்பதாக கூறிதையடுத்து அடகு வைத்த நகையை மீட்டு திருப்பிக் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க | நடராஜர் கோயிலில் அதிருத்ர பாராயணம் தொடக்கம்!
இதையடுத்து அம்மன் கழுத்தில் இருந்த தாலி செயினை நகை திருடியதாக அர்ச்சகர் சண்முகம் மீது திருவேற்காடு காவல் நிலையத்தில் கோயில் இளநிலை உதவியாளர் கனகசபரி புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் திருவேற்காடு போலீசார் அர்ச்சகர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் அம்மன் தாலி செயினை திருடிய அர்ச்சகர் கடந்த ஓராண்டாக இங்கு தற்காலிகமாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. சில நாள்களாக பலரிடமும் பணம் கடன் கேட்டு வந்துள்ள நிலையில், அவர் அம்மன் கழுத்தில் இருந்த தாலி செயினை திருடியுள்ளார். எதற்காக அவர் அம்மன் நகையை திருடினார், இதுபோல் வேறு ஏதாவது சம்பவத்தில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது, தலைமறைவாக உள்ள அவரை திருவேற்காடு போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.