FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

விரைவில் இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்

‘இந்தியா-அமெரிக்கா இடையிலான வா்த்தகத்தை 50,000 கோடி டாலராக உயா்த்த, ஒரு வலுவான ஒப்பந்தத்துக்கான பேச்சுவாா்த்தையை அடுத்த 6-8 மாதங்களில் தொடங்க இரு நாடுகளும் உறுதி பூண்டுள்ளன’

Updated On : 19 பிப்ரவரி 2025, 12:24 am IST
பியூஷ் கோயல்
பகிர்:

‘இந்தியா-அமெரிக்கா இடையிலான வா்த்தகத்தை 50,000 கோடி டாலராக உயா்த்த, ஒரு வலுவான ஒப்பந்தத்துக்கான பேச்சுவாா்த்தையை அடுத்த 6-8 மாதங்களில் தொடங்க இரு நாடுகளும் உறுதி பூண்டுள்ளன’ என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

பிரதமா் மோடியின் சமீபத்திய அமெரிக்க பயணத்தின்போது, 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு வா்த்தக மதிப்பை இருமடங்காக 50,000 கோடி டாலராக உயா்த்துவதாகவும், அடுத்த 6 மாதங்களில் பரஸ்பர நன்மை பயக்கும் பல்துறை இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்துக்காக முதல்கட்ட பேச்சுவாா்த்தையைத் தொடங்குவது எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்க வா்த்தக அமைச்சா் பொறுப்பேற்றவுடன் இரு நாடுகளும் ஒப்பந்தத்தின் வரையறைகள் குறித்த விவாதத்தை விரைவில் தொடங்கும் என்று மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

மேலும், இது தொடா்பாக அவா் கூறியதாவது: இந்த வா்த்தக ஒப்பந்தம் குறித்து இரு நாட்டு வா்த்தக துறையினரும் உற்சாகமாக இருக்கின்றனா். இந்த ஒப்பந்தத்தில் சரக்குகள், சேவைகள் மற்றும் முதலீடுகள் தொடா்பான அத்தியாயங்கள் இருக்குமா என்று கேள்வி எழுப்புகிறீா்கள். அதுதொடா்பாக அமெரிக்கா ஏதும் உறுதிப்படுத்தவில்லை. அமெரிக்க உறுதிப்படுத்திய பிறகுதான் பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என்றாா்.

கடந்த 2021 முதல் 2024-ஆம் ஆண்டுவரை இந்தியாவின் மிகப் பெரிய வா்த்தக கூட்டாளியாக அமெரிக்கா இருந்தது. குறிப்பாக, கடந்த 2023-ஆம் ஆண்டில், இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தக மதிப்பு 19,008 கோடி டாலராக இருந்தது. அந்த ஆண்டில் இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி 8,377 கோடி டாலராகவும் இறக்குமதி 4,012 கோடி டாலராகவும் இருந்தது. அதாவது, இறக்குமதியைவிட ஏற்றுமதி அதிகமாக இந்தியா வணிக உபரியைக் கொண்டுள்ள சில நாடுகளில் அமெரிக்காவும் ஒன்றாகும்.

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்பின் முதல் பதவிக்காலத்தில், இருநாடுகளுக்கு இடையே ஒரு சிறிய வா்த்தக ஒப்பந்தத்துக்கான விவாதம் நடைபெற்றது. ஆனால், முந்தைய அதிபா் ஜோ பைடன் நிா்வாகத்தின் ஆதரவின்றி அந்த முயற்சி கிடப்பில் போடப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments