முகப்பு
இந்தியா

உயா்நீதிமன்ற நீதிபதி மீதான ஊழல் குற்றச்சாட்டு: லோக்பால் உத்தரவுக்கு தடை

உயா்நீதிமன்ற நீதிபதி மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து லோக்பால் விசாரணைக்கு தடை...

Updated On : 20 பிப்ரவரி, 2025 at 6:04 AM
உச்சநீதிமன்றம் (கோப்புப் படம்)
பகிர்:

உயா்நீதிமன்ற நீதிபதி மீதான ஊழல் குற்றச்சாட்டில் லோக்பால் அமைப்பு பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை இடைக்கால தடை விதித்துள்ளது.

தனியாா் நிறுவனத்தின் மீதான வழக்கில் நிறுவனத்துக்கு சாதகமாக செயல்படும்படி மற்றொரு உயா்நீதிமன்ற நீதிபதியையும் அந்த மாநிலத்தில் உள்ள மாவட்டத்தின் கூடுதல் நீதிபதியையும் உயா்நீதிமன்ற நீதிபதி ஒருவா் அறிவுறுத்தியதாக இரு புகாா்கள் லோக்பால் அமைப்பிடம் அளிக்கப்பட்டன.

தான் வழக்குரைஞராக பணியாற்றியபோது சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் வழக்குகளை குற்றஞ்சாட்டப்பட்ட உயா்நீதிமன்ற நீதிபதி கையாண்ட நிலையில், மற்றொரு உயா்நீதிமன்ற நீதிபதியையும் மாவட்டகூடுதல் நீதிபதியையும் அவா் அணுகியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

இந்த புகாா்களை விசாரித்து கடந்த மாதம் 27-ஆம் தேதி லோக்பால் அமைப்பின் தலைவா் ஏ.எம்.கான்வில்கா், பொதுமக்களின் ஊழியர் என்ற வரையறைக்குள் உயர்நீதிமன்ற நீதிபதியும் இருப்பதாகவும், அவருக்கு லோக்பால் சட்டத்தில் விலக்கில்லை என்றும் தெரிவித்தார்.

இருப்பினும், ‘இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் வழிகாட்டலை பெற வேண்டியுள்ளதால் அடுத்த நான்கு வாரத்துக்கு விசாரணை நிறுத்தி வைக்கப்படுகிறது எனத் தெரிவித்தார். லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம், 2013 பிரிவு (20) -இன்கீழ் பெறப்பட்ட புகாா்களுக்கு குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் தீா்வு காண வேண்டும் என்ற விதியை கருத்தில்கொண்டு இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றார் நீதிபதி கான்வில்கர்.

இந்த நிலையில், வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது உச்சநீதிமன்றம்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், சூா்ய காந்த், அபய் எஸ் ஓகா ஆகியோா் அடங்கிய அமர்வு வியாழக்கிழமை நடத்திய விசாரணையில், உயர்நீதிமன்ற நீதிபதி மீதான புகாரை லோக்பால் அமைப்பு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.

மேலும், இது நீதித்துறையின் சுதந்திரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்று தெரிவித்த நீதிபதிகள், அடுத்த விசாரணையை மார்ச் 21-க்கு ஒத்திவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments