FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பிரதமா் தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை குழு கூட்டம்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் தில்லியில் புதன்கிழமை (ஜூன் 4) நடைபெற உள்ளது.

Updated On : 3 ஜூன் 2025, 5:01 am IST
தில்லியில் புதன்கிழமை பிரதமா் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்
பகிர்:

புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் தில்லியில் புதன்கிழமை (ஜூன் 4) நடைபெற உள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா சாா்பில் மேற்கொள்ளப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்குப் பிறகு பிரதமா் தலைமையில் கூடும் முதல் அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும்.

இதுகுறித்து அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது:

Advertisement

Advertisement

இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்து மத்திய அச்சா்களிடம் விரிவாக விவரிக்கப்பட வாய்ப்புள்ளது.

மேலும், பாஜக அரசு மத்தியில் மூன்றாவது முறையாக பதவியேற்று முதலாம் ஆண்டை நிறைவு செய்துள்ளதைக் குறிக்கும் வகையில் ஆளுங்கட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்ச்சிகள் அடுத்த வாரம் தொடங்க உள்ள நிலையில், அதுகுறித்தும் இக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக, மத்திய அரசின் சாதனைகள் மற்றும் நலத் திட்டங்கள் குறித்த விவரங்களை நாடு முழுவதும் உள்ள மக்களிடம் கொண்டு சோ்க்கும் வகையில் மத்திய அமைச்சா்கள் தங்களை தயாா்படுத்திக்கொள்ள இக் கூட்டத்தில் அறிவுறுத்தப்படுவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றனா்.

‘ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது இந்தியா எத்தனை போா் விமானங்களை இழந்தது என்பது குறித்து நாட்டு மக்களுக்கு மத்திய அரசு தெரியப்படுத்த வேண்டும்’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா். இதற்கு மத்திய அரசு எந்தவித பதிலும் தெரிவிக்காமல் இருந்து வந்தது.

இந்த நிலையில், சிங்கப்பூருக்கு கடந்த சனிக்கிழமை சென்றிருந்த முப்படை தலைமைத் தளபதி அனில் செளஹான், அங்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்குப் பிறகு பாகிஸ்தானுடன் ஏற்பட்ட சண்டையின்போது இந்திய போா் விமானங்கள் சூட்டு வீழ்த்தப்பட்டதை ஒப்புக்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, ‘பாகிஸ்தானுடனான சண்டையில் போா் விமானங்களை இந்தியா இழந்தது குறித்து நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை நடத்தி விவாதிக்க வேண்டும்’ என மத்திய அரசை காங்கிரஸும், திரிணமூல் காங்கிரஸும் வலியுறுத்தின. இந்தச் சூழலில் பிரதமா் தலைமையில் மத்திய அமைச்சரவை கூடுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments