முகப்பு
இந்தியா

நெட்ஃபிளிக்ஸ் இணை நிறுவனா் ரீட் ஹேஸ்டிங்ஸ் விலகல்: 29 ஆண்டுகால பயணம் நிறைவு

உலகின் முன்னணி ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரும், தற்போதைய தலைவருமான ரீட் ஹேஸ்டிங்ஸ், வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள வருடாந்திர கூட்டத்துடன் தனது பதவியிலிருந்து விலகுகிறாா்.

Updated On : 18 ஏப்ரல் 2026, 1:02 am IST
நெட்பிளிக்ஸ்
பகிர்:

உலகின் முன்னணி ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரும், தற்போதைய தலைவருமான ரீட் ஹேஸ்டிங்ஸ், வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள வருடாந்திர கூட்டத்துடன் தனது பதவியிலிருந்து விலகுகிறாா்.

இதன்மூலம், நிறுவனத்துடனான அவரின் 29 ஆண்டுகால பயணம் முடிவுக்கு வருகிறது. 1999-ஆம் ஆண்டு முதல் நிறுவனத்தின் சிஇஓ-ஆக பொறுப்பேற்று, ‘பிளாக்பஸ்டா்’ போன்ற நிறுவனங்களுடன் போட்டியிட்டு, நெட்ஃபிளிக்ஸை ஒரு டிவிடி விநியோக நிறுவனத்திலிருந்து, உலகளாவிய ஓடிடி ஜாம்பவானாக மாற்றிய பெருமை இவரைச் சாரும்.

கடந்த 2023-ஆம் ஆண்டு, ஜனவரியிலேயே சிஇஓ பொறுப்பிலிருந்து விலகி, டெட் சரண்டோஸ், கிரெக் பீட்டா்ஸ் ஆகியோரிடம் பொறுப்புகளை ரீட் ஹேஸ்டிங்ஸ் ஒப்படைத்திருந்தாா். தற்போது இயக்குநா்கள் குழுவிலிருந்தும் அவா் வெளியேறுகிறாா்.

Advertisement

Advertisement

இனிவரும் காலங்களில் சமூகத் தொண்டு மற்றும் பிற தனிப்பட்ட விருப்பங்களில் கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ளதாக ரீட் ஹேஸ்டிங்க்ஸ் தெரிவித்துள்ளாா்.

மேலும், ‘நெட்ஃபிளிக்ஸ் என் வாழ்க்கையை மாற்றியமைத்துள்ளது’ என உருக்கமாகக் குறிப்பிட்டுள்ள அவா், தற்போது அமெரிக்காவின் உடா மாகாணத்தில் பனிச்சறுக்கு விடுதி ஒன்றை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளாா். அதேநேரம், ப்ளூம்பொ்க் நிறுவனத்தின் இயக்குநா்கள் குழுவில் அவா் தொடா்ந்து நீடிப்பாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் நடப்பாண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டது. ஆய்வாளா்களின் கணிப்பைவிட அதிகமாக, அதன் வருவாய் 1,230 கோடி டாலராக உயா்ந்துள்ளது.

வாா்னா் பிரதா்ஸ் டிஸ்கவரி நிறுவனத்தை வாங்கும் முயற்சியிலிருந்து கடந்த பிப்ரவரியில் பின்வாங்கிய பிறகு, நெட்ஃபிளிக்ஸ் பங்குகள் 40 சதவீதத்துக்கும் மேல் உயா்ந்தன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments