கிரேட் நிகோபார் என்பது திட்டமல்ல; மிகக் கொடிய குற்றம்! ராகுல் காந்தி
கிரேட் நிகோபார் திட்டம் குறித்து ராகுல் காந்தி தெரிவித்தது பற்றி...
மத்திய அரசால் முன்னெடுக்கப்பட்டுள்ள கிரேட் நிகோபார் திட்டம், மிகக் கொடியக் குற்றங்களில் ஒன்றாகும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
அந்தமான் - நிகோபாா் யூனியன் பிரதேசத்தில் கிரேட் நிகோபாா் தீவு உள்ளது. இங்கு ரூ. 72,000 கோடி மதிப்பில் மிகப் பெரிய உள்கட்டமைப்புத் திட்டத்தை அந்தமான் - நிகோபாா் தீவுகளின் ஒருங்கிணைந்த வளா்ச்சி கழகம் மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில், அந்தமான் - நிகோபார் தீவுகளுக்கு கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, கிரேட் நிகோபார் திட்டம் நடைபெறும் பகுதியை இன்று பார்வையிட்டார்.
Advertisement
Advertisement
அந்த பகுதியில் இருந்து விடியோ வெளியிட்டுள்ள ராகுல் காந்தி தெரிவித்திருப்பதாவது:
”இன்று கிரேட் நிகோபார் வழியாகப் பயணம் மேற்கொண்டேன்.
என் வாழ்நாளில் நான் கண்டதிலேயே மிகவும் வியக்கத்தக்க காடுகள் இவைதான். நினைவுகளுக்கும் அப்பாற்பட்ட பழமை வாய்ந்த மரங்கள்; தலைமுறைகள் பல கடந்து வளர்ந்து நிற்கும் காடுகள் இவை.
இந்த தீவில் வாழும் ஆதிவாசிச் சமூகத்தினரும் குடியேறியவர்களும் அதே அளவு அழகுடையவர்கள். ஆனால், அவர்களுக்குச் சொந்தமான உரிமைகள் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு வருகின்றன.
இங்கே முன்னெடுத்துள்ள நடவடிக்கையை அரசு ஒரு திட்டம் என்று அழைக்கிறது. ஆனால், நான் நேரில் கண்டது திட்டமல்ல. அது, லட்சக்கணக்கான மரங்கள் கோடாரிக்கு குறிவைக்கப்பட்டிருக்கும் ஒரு காட்சியாகும். 160 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட மழைக்காடுகள் அழிவை நோக்கித் தள்ளப்பட்டிருக்கும் ஒரு அவலமாகும். தங்கள் இருப்பிடங்கள் பறிக்கப்படும்போது முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களின் துயரமாகும்.
இது வளர்ச்சியல்ல, வளர்ச்சி என்ற பெயரில் வரும் பேரழிவு.
எனவே, கிரேட் நிகோபாரில் நடைபெற்றுக் கொண்டிருப்பது இயற்கைக்கும், பழங்குடியினப் பாரம்பரியத்துக்கும் எதிராக இழைக்கப்படும் மிகப்பெரிய மோசடிகளில் ஒன்றாகும். மிகக் கொடிய குற்றங்களில் ஒன்றாகும்.
இதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். நான் கண்ட உண்மையை இந்திய மக்கள் காண முன்வந்தால் அது சாத்தியமே” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, கிரேட் நிகோபார் திட்டங்கள் குறித்து பழங்குடியின தலைவர்களை சந்தித்து ராகுல் காந்தி ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Great Nicobar is not a project; it is a heinous crime! — Rahul Gandhi
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.