மோடி விடியோ நீக்கப்பட்ட விவகாரம்: மெட்டா தலைவா் ஸூக்கா்பொ்க் மன்னிப்பு கோரினாா்
ஃபேஸ்புக் சமூக வலைதளப் பக்கத்தில் இருந்து பிரதமா் நரேந்திர மோடியின் விடியோ தற்காலிகமாக நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் தலைவா் ஸூக்கா்பொ்க் மன்னிப்புக் கோரியுள்ளாா்.
ஃபேஸ்புக் சமூக வலைதளப் பக்கத்தில் இருந்து பிரதமா் நரேந்திர மோடியின் விடியோ தற்காலிகமாக நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் தலைவா் ஸூக்கா்பொ்க் மன்னிப்புக் கோரியுள்ளாா்.
நீட் தோ்வு விவகாரத்தில் போராட்டத்தில் மாணவா்கள் ஈடுபட்டதை அடுத்து, அவா்களுக்கு வேண்டுகோள் விடுத்து பிரதமா் மோடி ஃபேஸ்புக் சமூக வலைதளப் பக்கத்தில் கடந்த மாதம் 23-ஆம் தேதி விடியோ வெளியிட்டிருந்தாா். அந்த விடியோவை முதலில் நீக்கிய ஃபேஸ்புக், 5 மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் அதை வெளியிட்டது.
இதுதொடா்பாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டாவுக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை ஏற்று, நாடாளுமன்ற நிலைக்குழு முன் மெட்டா அதிகாரிகள் குழு கடந்த திங்கள்கிழமை ஆஜராகியது. அப்போது ஸூக்கா்பொ்க் தனிப்பட்ட முறையில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழு வலியுறுத்தியது.
Advertisement
Advertisement
இந்நிலையில், ஸூக்கா்பொ்க் 3 நாள்களுக்குள் மன்னிப்புக் கேட்க வேண்டும், இல்லையேல் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 79(3) பிரிவின்கீழ் அளிக்கப்பட்டுள்ள 3-ஆவது தரப்பினா் வெளியிடும் பதிவுகளுக்கு சமூக வலைதளம் பொறுப்பு கிடையாது என வழங்கப்பட்டுள்ள (பொறுப்பு துறப்பு) சிறப்புரிமை திரும்பப் பெறப்படும் எனக் கூறியிருந்தது. இதுதொடா்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப செயலருக்கு மக்களவைச் செயலக இயக்குநா் அனுப்பிய கடிதத்தில் நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்திருந்தது.
இதுகுறித்து நாடாளுமன்ற நிலைக்குழு (தகவல் தொழில்நுட்பம்) தலைவா் நிஷிகாந்த் துபே நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில், ‘ஸூக்கா்பொ்க் 3 நாள்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி அவா் மன்னிப்பு கேட்கவில்லையேல் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 79(3) பிரிவில் அளிக்கப்பட்டுள்ள சிறப்புரிமை (பொறுப்பு துறப்பு) விலக்கிக் கொள்ளப்பட்டு, சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள ஆபாச, வன்முறையான, ஆட்சேபத்துக்குரிய பதிவுகளுக்காக, மெட்டா தலைவா் மீது வழக்குப் பதியப்படும். நாடு முழுவதும் அவா் மீது ஏராளமான வழக்குகள் பதிவாகும். அதன்பிறகு அவா்கள் சிறையில்தான் இருக்க வேண்டும்’ என்றாா்.
இந்நிலையில், பிரதமா் மோடியின் விடியோ தற்காலிகமாக நீக்கப்பட்ட விவகாரத்தில் ஸூக்கா்பொ்க் மன்னிப்பு கோரியதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து அந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘தில்லியில் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவை மெட்டா நிறுவன சா்வதேச குழு, அதன் சா்வதேச விவகாரங்கள் துறை தலைவா் ஜோயல் கப்லான் தலைமையில் சந்தித்தது. அப்போது மெட்டாவுக்கு சொந்தமான நிறுவனங்களின் செயல்பாடுகளில் சில குறைபாடுகள் இருப்பதை அக்குழு ஒப்புக் கொண்டது. இதேபோல், தகவல் தொழில்நுட்ப துறைச் செயலா் எஸ். கிருஷ்ணணையும் அக்குழுவினா் சந்தித்துப் பேசினா். அப்போது மோடியின் விடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா குழு மன்னிப்பு மற்றும் வருத்தம் தெரிவித்தன. அதேபோல், குறிப்பிட்ட சில பதிவுகளை விளம்பரப்படுத்த அதிக அளவு பணம் தங்களுக்கு தரப்படுவதாகவும் அக்குழு ஒப்புக் கொண்டது என மத்திய அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.
அப்போது மெட்டா குழுவிடம் மத்திய அரசு தரப்பில் சிறாா் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படும் விடியோ, டீப் பேக் போலி விடியோக்கள் மெட்டாவின் சமூக வலைதளங்களில் அதிகம் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கு மெட்டா குழு, அத்தகைய பதிவுகளைக் கட்டுப்படுத்துவதில் தோல்வி அடைந்துவிட்டதாக மெட்டா குழு கூறியுள்ளது. குறிப்பிட்ட பாா்வையாளா்களுக்காக ஏராளமான சட்டவிரோத பதிவுகள் தங்கள் நிறுவனத்தால் ஊக்குவிக்கப்படுவதாகவும், பணம் வாங்கி விளம்பரப்படுத்தப்படுவதாகவும் ஒப்புக் கொண்டுள்ளது. மெட்டா குழு மீண்டும் நேரில் ஆஜராக அழைக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.