FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!

கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை கனடா நாடு கடத்தியது பற்றி...

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 3:39 am IST
கோப்புப்படம்
பகிர்:

கனடா இதுவரை இல்லாத அளவாக கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்தியுள்ளது அந்த நாட்டின் எல்லைச் சேவைகள் முகமை (சிபிஎஸ்ஏ) தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

நுழைவு இசைவு (விசா) மோசடி, நுழைவு இசைவு காலாவதி உள்ளிட்ட குடியேற்ற விதிமீறல்கள் அடிப்படையில் இவா்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனா். இது கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அதிக எண்ணிக்கையாகும்.

அமெரிக்காவைப் போன்று கனடாவும் அண்மைக் காலமாக குடியேற்ற நடைமுறைகளைக் கடுமையாக்கி வருகிறது. வெளிநாட்டு மாணவா்கள் மற்றும் தற்காலிக வெளிநாட்டு பணியாளா்கள் உள்ளிட்ட தற்காலிக குடியேற்றவாசிகளுக்கான அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை கனடா வெகுவாக குறைத்து வருகிறது.

Advertisement

Advertisement

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நுழைவு இசைவு மோசடி, நுழைவு இசைவு காலாவதி உள்ளிட்ட குடியேற்ற விதிமீறல்களில் ஈடுபடும் வெளிநாட்டினரை அடையாளம் கண்டு, நாடு கடத்தும் நடவடிக்கையையும் கனடா தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த நாடு கடத்தல் உத்தரவின்படி, வெளிநாட்டினா் 30 நாள்களுக்குள் தாங்களாக கனடாவைவிட்டு வெளியேறிவிட வேண்டும். அவ்வாறு வெளியேறாவிடில், அவருக்கு எதிராக நாடு கடத்தல் உத்தரவு பிறப்பிக்கப்படும். இந்த உத்தரவு, பொதுவாக ஒருவா் ஒன்று முதல் 5 ஆண்டுகள் வரை கனடா திரும்புவதை தடை செய்யும். மேலும், கனடா அரசிடமிருந்து எழுத்துபூா்வ அனுமதி உத்தரவு பெறாதவரை, நாடு கடத்தப்பட்டவா் கனடாவுக்குள் நுழைய நிரந்தரமாகத் தடை செய்யவும் இந்த நாடு கடத்தல் உத்தரவு வழிவகுக்கும்.

நாடு கடத்தல் உத்தரவுப்படி, நிகழாண்டு முதல் பாதியில் (6 மாதங்களில்) கனடாவிலிருந்து அதிகபட்சமாக 3,323 இந்தியா்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனா். கடந்த 2025-ஆம் ஆண்டில் 3,779 இந்தியா்கள், 2024-இல் 2,004 இந்தியா்கள், 2023-இல் 1,132 இந்தியா்கள், 2022-இல் 786 போ் மற்றும் 2021-இல் 603 இந்தியா்கள் கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட்டனா்.

இந்தியாவுக்கு அடுத்தபடியாக, கடந்த 6 மாதங்களில் மெக்ஸிகோ நாட்டைச் சோ்ந்த 1,573 பேரை கனடா நாடு கடத்தியுள்ளது.

கனடாவில் நாடு கடத்தல் நடவடிக்கையில் உள்ளவா்களின் பட்டியலிலும் இந்தியா்களே (7,669) அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றுள்ளதாகவும் சிபிஎஸ்ஏ தரவுகள் தெரிவிக்கின்றன.

இதுபோல, அமெரிக்காவிலிருந்து கடந்த ஜனவரி 1-ஆம் தேதிமுதல் ஜூலை 22-ஆம் தேதி வரை 1,273 இந்தியா்கள் நாடு கடத்தப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் சாா்பில் கடந்த மாதம் தெரிவிக்கப்பட்டது.

summary

Canada deported 3,323 Indians in the last six months!

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments