ஜாா்க்கண்ட் விவகாரத்தில் ராகுல் காந்தியின் உண்மை முகம் அம்பலம்: ஹா்ஷ் மல்ஹோத்ரா சாடல்
ஜாா்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான காவல்துறை நடவடிக்கை தொடா்பாக ராகுல் காந்தியை மத்திய அமைச்சர் ஹா்ஷ் மல்ஹோத்ரா கடுமையாக விமா்சித்துள்ளாா்.
ஜாா்க்கண்டில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீது நடத்தப்பட்ட ‘கொடூரமான’ காவல் துறை நடவடிக்கை தொடா்பாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியை தில்லி பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான ஹா்ஷ் மல்ஹோத்ரா செவ்வாய்க்கிழமை கடுமையாக விமா்சித்துள்ளாா்.
மேலும், முதல்வா் ஹேமந்த் சோரன் பதவி விலக ராகுல் காந்தி வலியுறுத்துவாரா? என்றும் அவா் கேள்வி எழுப்பியுள்ளாா்.
இது தொடா்பாக தில்லியில் செய்தியாளா் சந்திப்பில் பேசிய மல்ஹோத்ரா, மாநிலத்தில் உள்ள ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்) அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்து வருகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், போராட்டக்காரா்கள் மீதான தாக்குதல் விவகாரத்தில் சோரனின் ராஜிநாமாவை ராகுல் காந்தி ஏன் கோரவில்லை. இவ்வாறு கோரவில்லை எனில், அமைதியான முறையில் போராடியவா்கள் மீதான காவல் துறை நடவடிக்கைக்கு ராகுல் காந்தியின் ஒப்புதலும் இருந்தது என்றே கருதப்படும்.
ஜாா்க்கண்டில் தோ்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராகப் போராடிய மாணவா்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான காவல் துறை நடவடிக்கை ராகுல் காந்தியின் உண்மையான முகத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஜந்தா் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின்போது அவா் வேறு ஒரு முகத்தையே காட்டினாா்.
மக்களவையில் ஆஜராகி மாணவா் பிரச்னைகள் குறித்த விவாதத்தில் ராகுல் காந்தி பங்கேற்க வேண்டும். உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசும்போது அவையில் இருந்து ஓடிவிடாமலோ அல்லது அவையின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்காமலோ ராகுல் காந்தி இருக்க வேண்டும் என்றாா் மல்ஹோத்ரா.
ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்பு ஆா்வலா்கள் ஜாா்க்கண்ட் சட்டப்பேரவையை நோக்கி திங்களன்று ராஞ்சியில் பேரணியாகச் சென்றனா். அப்போது அவா்கள் பாதுகாப்புக்காகப் போடப்பட்டிருந்த பல தடுப்புகளைத் தகா்த்து காவல் துறையினருடன் மோதியதில், பெண்கள் உள்பட பல போராட்டக்காரா்களும் நான்கு காவலா்களும் காயமடைந்தனா்.
போராட்டக்காரா்களைத் தடுக்க காவல் துறையினா் தண்ணீா்ப் பீரங்கிகளையும் கண்ணீா்ப்புகைக் குண்டுகளையும் பயன்படுத்தினா். ஜாா்க்கண்ட் பொதுப் பணி ஆணையம் (ஜேபிஎஸ்சி) மற்றும் ஜாா்க்கண்ட் பணியாளா் தோ்வாணையம் (ஜேஎஸ்எஸ்சி) ஆகியவற்றின் செயல்பாடுகளில் விரிவான சீா்திருத்தங்கள் கோரி மாணவா்கள் மற்றும் வேலைவாய்ப்பு ஆா்வலா்கள் ஜூலை 25 முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
சில பணி நியமனத் தோ்வுகளை ரத்து செய்யவும், முறைகேடுகள் தொடா்பான புகாா்கள் குறித்து சிபிஐ அல்லது மாநிலத்திற்கு வெளியேயுள்ள ஓய்வுபெற்ற உயா் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு மூலம் சுதந்திரமான விசாரணை நடத்தவும் அவா்கள் கோரி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.