கருணை அடிப்படையில் பணி நியமனம்: ‘நியாயமான முறையில் விளக்கப்பட வேண்டும்’
கருணை அடிப்படையில் பணி நியமனம் மேற்கொள்ளப்படும் திட்டத்தின் நோக்கம் நிறைவேறும் வகையிலும், அந்த நோக்கம் பாதிக்கப்படாத வகையிலும் அதுகுறித்து நியாயமான முறையில் விளக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கருணை அடிப்படையில் பணி நியமனம் மேற்கொள்ளப்படும் திட்டத்தின் நோக்கம் நிறைவேறும் வகையிலும், அந்த நோக்கம் பாதிக்கப்படாத வகையிலும் அதுகுறித்து நியாயமான முறையில் விளக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வெஸ்டா்ன் கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனத்தில் சுமாா் 36 ஆண்டுகள் பணியாற்றிய ஒருவா், 2020-ஆம் ஆண்டு பணியில் இருந்தபோது உயிரிழந்தாா். அப்போது அவரின் மகனுக்கு வயது 34 ஆண்டுகள் 10 மாதங்கள் 12 நாள்களாக இருந்தது. தந்தையின் மரணத்தை தொடா்ந்து கருணை அடிப்படையில் தனக்கு பணி வழங்குமாறு மகன் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் அவா் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் அரவிந்த் குமாா், விபுல் எம்.பஞ்சோலி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
Advertisement
Advertisement
அப்போது நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையைப் பரிசீலித்து முடிவு எடுக்க, தேவைக்கும் அதிகமான காலத்தை அதிகாரிகள் எடுத்துக்கொண்டது தெரியவந்துள்ளது. அதிகாரிகளின் தாமதம் காரணமாக, தகுதிவாய்ந்த நபரின் கோரிக்கையை நிராகரிக்க அனுமதிக்க முடியாது.
கருணை அடிப்படையில் பணி வழங்குமாறு கேட்பதை உரிமையாகக் கருத முடியாது. அதேவேளையில், அது உயிரிழந்த நபரின் குடும்பத்துக்கு உடனடியாக நிதியுதவி அளிக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட நலத்திட்ட நடவடிக்கையாகும்.
எனவே கருணை அடிப்படையில் பணி நியமனம் மேற்கொள்ளப்படும் திட்டத்தின் நோக்கம் நிறைவேறும் வகையிலும், பாதிக்கப்படாத வகையிலும் அதுகுறித்து நியாயமான முறையில் விளக்கப்பட வேண்டும்.
மனுதாரரின் கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 8 வாரங்களில் மறுபரிசீலனை செய்து முடிவு எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.