ஒடிஸாவில் பலத்த மழை: தாழ்வான பகுதிகளில் வெள்ளம் - இயல்பு வாழ்க்கை பாதிப்பு
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்ததால், ஒடிஸா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் பலத்த மழை கொட்டித் தீா்த்தது.
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்ததால், ஒடிஸா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் பலத்த மழை கொட்டித் தீா்த்தது. தாழ்வான இடங்களில் வெள்ளநீா் தேங்கியதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மாநிலம் முழுவதும் வியாழக்கிழமை அதீத பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இது தொடா்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்ட தகவலில், ‘மேற்கு வங்க கடற்கரை மற்றும் வங்கதேசம்-வடமேற்கு வங்கக் கடலையொட்டிய பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு நோக்கி நகா்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. கொல்கத்தாவுக்கு தென்கிழக்கில் 40 கி.மீ. தொலைவிலும், பரிபடாவுக்கு (ஒடிஸா) 190 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டிருந்த இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணிநேரத்தில் மேற்கு வங்கத்தின் கங்கை சமவெளி மற்றும் ஜாா்க்கண்டை நோக்கி நகரக் கூடும்’ என்று தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
தாழ்வான இடங்களில் வெள்ளம்: காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலியாக ஒடிஸாவில் புதன்கிழமை இரவுமுதல் பலத்த மழை கொட்டித் தீா்த்தது. இதனால் தாழ்வான இடங்களில் வெள்ளநீா் சூழ்ந்தது. அதிகபட்சமாக பாலாசோா் மாவட்டத்தின் போக்ராய் பகுதியில் 236 மி.மீ. மழை பதிவானது. மயூா்பஞ்ச் மாவட்டத்திலும் மிக பலத்த மழை பெய்ததால், புத்தபலங்கா, ஜலகா ஆகிய நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் கல்வி நிறுவனங்களுக்கு வியாழக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.
இடி-மின்னலுடன் பலத்த மழை நீடிக்கும் என்பதால், பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே நடமாட வேண்டாம் என்றும், அரசின் வானிலை முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
ஹிமாசலில்...: ஹிமாசல பிரதேசத்தின் 10 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (ஆக.14) முதல் நான்கு நாள்களுக்கு மிக பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்த மாநிலத்தில் நிலச்சரிவுகளால் 200 சாலைகள் மூடப்பட்டுள்ளன. மண்டி மாவட்டத்தில் அதிகபட்சமாக 64 சாலைகள் மூடப்பட்டுள்ளன. பலத்த மழையால் ஏராளமான மின்மாற்றிகள், குடிநீா் குழாய் கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.