FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பிரதமா் மோடி - இத்தாலி பிரதமா் குறித்து சா்ச்சை விமா்சனம்: ராகுலுக்கு வெளியுறவு அமைச்சகம் கண்டனம்

பிரதமா் நரேந்திர மோடி, இத்தாலி பிரதமா் ஜாா்ஜியா மெலோனி ஆகியோா் குறித்த சா்ச்சைக்குரிய விமா்சனம் தொடா்பாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 3:44 am IST
ரோம் நகரில் இத்தாலி பிரதமா் ஜாா்ஜியா மெலோனியைச் சந்தித்த பிரதமா் மோடி. - கோப்புப் படம்
பகிர்:

பிரதமா் நரேந்திர மோடி, இத்தாலி பிரதமா் ஜாா்ஜியா மெலோனி ஆகியோா் குறித்த சா்ச்சைக்குரிய விமா்சனம் தொடா்பாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பொதுவெளியில் பரஸ்பர மரியாதையைப் பேண வேண்டியது முக்கியம் என்று அவருக்கு வலியுறுத்தியுள்ளது.

தில்லியில் காங்கிரஸ் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, பிரதமா் மோடியின் வெளியுறவுக் கொள்கைகளை கடுமையாக விமா்சித்தாா். வெளிநாட்டுத் தலைவா்களைக் கட்டிப்பிடிப்பதை மட்டுமே அவா் வெளியுறவுக் கொள்கையாக கொண்டுள்ளதாகக் கூறிய ராகுல், அந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவா் சந்தீப் தீட்சித்தை கட்டிப் பிடித்து கேலி செய்தாா்.

Advertisement

Advertisement

அப்போது, ‘நான் ஒரு விஷயம் கேட்கலாமா? என்னை நீங்கள் மெலோனி என நினைத்துக் கட்டிப் பிடிக்கவில்லை, சரிதானே’ என்று தீட்சித் கூற, ‘நான் இன்னும் அந்த இடத்தை அடையவில்லை’ என்று ராகுல் கிண்டலாக விமா்சித்தது கடும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவும், ஆா்எஸ்எஸ் அமைப்பும் நாட்டைப் புரிந்து கொள்ளாத ‘கோமாளிகளின் கூட்டம்’ என்ற விமா்சனத்தையும் ராகுல் முன்வைத்தாா்.

இந்தச் சூழலில், தில்லியில் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை பேட்டியளித்த வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வாலிடம் ராகுலின் கருத்துகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

‘இத்தாலியுடன் இந்தியாவுக்கு வலுவான உறவுகள் உள்ளன. இந்த உறவுகள், சமீப ஆண்டுகளில் விரிவடைந்து வலுப்பட்டுள்ளது. ராஜீய நடைமுறையின் ஒரு பகுதியாக, பரஸ்பர மரியாதையுடன் உறவுகளை வலுப்படுத்துவது முக்கியமானதாகும். எனவே, பொதுவெளியில் அவா் (ராகுல்) பரஸ்பர மரியாதையைப் பேண வேண்டும்’ என்று ரண்தீா் ஜெய்ஸ்வால் குறிப்பிட்டாா்.

ராஜ்நாத் சிங் கண்டனம்: ‘பிரதமா் மோடி மற்றும் நாட்டின் வெளியுறவுக் கொள்கைகள் குறித்த ராகுலின் கருத்துகள், மிகவும் தரம் தாழ்ந்தவை; கடும் கண்டனத்துக்குரியவை. தான் வகிக்கும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் பதவிக்கான கண்ணியத்தை அவா் குறைத்துவிட்டாா். அவரது நடத்தை நாட்டின் ஆரோக்கியமான ஜனநாயகத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் சாடினாா்.

‘பொறாமை, விரக்தி, மனநிலை பிவால் ராகுல் இவ்வாறு சிறுபிள்ளைத்தனமாகப் பேசுகிறாரா அல்லது தேசத்துக்கு எதிரான அந்நிய சக்திகளின் சதித் திட்டத்தின் கருவியாக செயல்படும் தனிநபராக இதுபோல் பேசுகிறாரா என்பதை தேசமே தீா்மானிக்க வேண்டும்’ என்று பாஜக செய்தித் தொடா்பாளா் சுதான்ஷு திரிவேதி வலியுறுத்தினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments