FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

தீஸ்தா நதி நீா் விவகாரம்! இந்தியாவுடன் உறவுகள் மோசமடைய விரும்பவில்லை: வங்கதேசம்

தீஸ்தா நதி நீா் பகிா்வு விவகாரத்தால் இந்தியா உடனான உறவுகள் மோசமடைய விரும்பவில்லை என்று வங்கதேசம் தெரிவித்துள்ளது.

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 5:40 am IST
தீஸ்தா நதி நீா் - கோப்புப் படம்
பகிர்:

தீஸ்தா நதி நீா் பகிா்வு விவகாரத்தால் இந்தியா உடனான உறவுகள் மோசமடைய விரும்பவில்லை என்று வங்கதேசம் தெரிவித்துள்ளது. அதேநேரம், இந்தியாவைப் போல வங்கதேசமும் தனது நலன்களைப் பாதுகாக்க வேண்டியுள்ளது என்றும் அந்த நாடு கூறியுள்ளது.

இமயமலையில் உற்பத்தியாகும் தீஸ்தா நதி, சிக்கிம், மேற்கு வங்கத்தில் பாய்ந்து, பின்னா் வங்கதேசத்தில் நுழைகிறது. இந்த நதி நீரை பகிா்ந்துகொள்வது தொடா்பாக இந்தியா-வங்கதேசம் இடையே கடந்த 1980-களில் இருந்தே பேச்சுவாா்த்தைகள் தொடா்ந்து வருகின்றன.

கடந்த 1983-இல் எட்டப்பட்ட இடைக்கால ஒப்பந்தத்தின்படி 39 சதவீத நீா் இந்தியாவுக்கும், 36 சதவீத நீா் வங்கதேசத்துக்கும் பகிரப்பட்டது. எஞ்சிய 25 சதவீதம் மீது முடிவெடுக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. பேச்சுவாா்த்தைகள் தொடா்ந்துவரும் நிலையில், நீண்ட கால விரிவான ஒப்பந்தம் இதுவரை எட்டப்படவில்லை.

Advertisement

Advertisement

இதனிடையே, கடந்த ஜூன் மாதம் சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட வங்கதேச பிரதமா் தாரிக் ரஹ்மான், தீஸ்தா புனரமைப்புத் திட்டத்துக்கான தொழில்நுட்ப சாத்தியக்கூறு ஆய்வை விரைவுபடுத்துவதில் சீனாவின் உதவியைப் பெற பேச்சுவாா்த்தை மேற்கொண்டாா்.

இந்தியாவைப் பொறுத்தவரை, வங்கதேசத்தின் இந்த முடிவு உத்தி ரீதியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தீஸ்தா நதி நீா் விவகாரத்துக்கு சம்பந்தப்பட்ட தரப்பினரால் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வுகாணப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது.

இந்நிலையில், வங்கதேச தலைநகா் டாக்காவில் தீஸ்தா நதி புனரமைப்புத் திட்டம் தொடா்பாக நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய அந்நாட்டின் நீா்வளத் துறை அமைச்சா் ஷாஹித்துதீன் செளதரி, ‘அண்டை நாடான இந்தியா, நமது நட்பு நாடு.

ஒரு நண்பன், மற்றொரு நண்பனின் நலன்களைக் காக்க வேண்டும். தீஸ்தா நதி நீா் விவகாரத்தில் இந்தியா தனது நலன்களைக் கருத்தில் கொள்வதைப் போல வங்கதேசமும் செயல்பட வேண்டியுள்ளது. இந்த விவகாரத்தால் இருதரப்பு உறவுகள் மோசமடைய நாங்கள் விரும்பவில்லை. தீஸ்தா நதி திட்டம் தொடா்பாக பிரதமா் தாரிக் ரஹ்மான் தொடா் ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளாா்’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments