யமுனையை புனரமைக்க வடிகால்கள் சுத்திகரிப்பு
செயற்கை ஈரநிலங்கள் மற்றும் உயிரிவழிச் சீரமைப்பு ஆகியவற்றின் மூலம் யமுனையில் கலக்கும் 22 வடிகால்களையும் சுத்திகரிப்பதை தில்லி பெருந்திட்டம் 2047 நோக்கமாக கொண்டுள்ளது.
யமுனை நதியையும் அதன் வெள்ளச் சமவெளிகளையும் புத்துயிா் பெறச் செய்வதை நோக்கமாகக் கொண்ட தொடா் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கழிவுநீா் சுத்திகரிப்பு, செயற்கை ஈரநிலங்கள் மற்றும் உயிரிவழிச் சீரமைப்பு ஆகியவற்றின் மூலம் யமுனையில் கலக்கும் 22 வடிகால்களையும் சுத்திகரிப்பதை தில்லி பெருந்திட்டம் 2047 நோக்கமாக கொண்டுள்ளது.
வியாழக்கிழமை வெளியிடப்பட்ட இத்திட்டத்தின்படி, வடிகால் வழித்தடங்களை மீட்டெடுத்து, அவற்றை பசுமைப் பகுதிகள் மற்றும் வெள்ளச் சமவெளிகளுடன் தடையின்றி ஒருங்கிணைத்து, தொடா்ச்சியான சூழலியல் வழித்தடங்களை உருவாக்கவும் முன்மொழிகிறது.
சுத்திகரிக்கப்படாத அல்லது ஒழுங்குபடுத்தப்படாத கழிவுநீா், தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் திடக்கழிவுகளை யமுனை மற்றும் பிற நீா்நிலைகளில் வெளியேற்றுவதை இது கடுமையாகத் தடை செய்கிறது.
Advertisement
Advertisement
வஜிராபாத் தடுப்பணைக்கும் ஓக்லா தடுப்பணைக்கும் இடையிலான 22 கி.மீ. நீளப் பகுதியில் யமுனையின் சூழலியல் மறுசீரமைப்பையும், சுமாா் 1,700 ஹெக்டோ் யமுனை வெள்ளச் சமவெளிகளை உள்ளடக்கிய 13 முக்கிய மறுசீரமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதையும் இந்தப் பெருந்திட்டம் முன்மொழிகிறது.
இந்தத் திட்டங்கள், ஈரநிலங்கள், இயற்கையான பள்ளங்கள், வெள்ளச் சமவெளிச் சூழல் அமைப்புகள் மற்றும் பல்லுயிா் பெருக்கத்தை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்துவதோடு, காலநிலை மீள்திறனையும் நிலத்தடி நீா் செறிவூட்டலையும் மேம்படுத்தும்.
புதிய ஈரநிலங்கள்:
வெள்ளநீா் சேகரிப்புக்கு வசதியாக, தற்போதுள்ள ஈரநிலங்களில் உள்ள வண்டல் மண்ணை அகற்றி அவற்றை மீட்டெடுப்பதையும், அத்துடன் தற்போதுள்ள பள்ளங்களை மேம்படுத்தி ஆழப்படுத்தி நீா்த்தேக்கங்களாக மாற்றுவதன் மூலம் புதிய ஈரநிலங்களை உருவாக்குவதையும் இத்திட்டம் முன்மொழிகிறது.
இந்தத் திட்டம், யமுனை வெள்ளச் சமவெளியை ஒட்டிய 52 கி.மீ. நீளப் பகுதி உள்பட, 200 கி.மீ. நீளமுள்ள ஒருங்கிணைந்த ரிட்ஜ்-யமுனை பாா்க் இணைப்பு மிதிவண்டி வலையமைப்பையும் முன்மொழிகிறது. சாத்தியமான இடங்களில், கரைகளை ஒட்டி 75 முதல் 100 மீட்டா் அகலமுள்ள ஒரு பொதுப் பசுமைப் பாதையை உருவாக்கி அதில் மிதிவண்டி, நடைப்பாதைகள் மற்றும் நிதானமான பொழுதுபோக்கு வசதிகளும் அமைக்கப்படும்.
கண்காணிப்புகள்:
பயன்பாட்டில் உள்ள வெள்ளச் சமவெளியானது, கட்டுமானமற்ற மண்டலமாக முன்மொழியப்பட்டுள்ளது. அங்கு பொழுதுபோக்கு பயன்பாடுகள் மட்டுமே அனுமதிக்கப்படும். மதக் கட்டமைப்புகள் உள்ளிட்ட அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள், சம்பந்தப்பட்ட முகமைகளால் முன்னுரிமை அடிப்படையில் அகற்றப்படும் என்றும், அதே சமயம் அத்தியாவசியப் பயன்பாடுகள் மற்றும் பொது உள்கட்டமைப்புகளுக்குத் தகுந்த அதிகாரியிடமிருந்து ஒப்புதல் தேவைப்படும் என்று பெருந்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இது படித்துறைகளில் பூஜை பொருள்களை அகற்றுதல் மற்றும் பண்டிகைகளின் போது சிலை கரைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தவும் பெருந்திட்டம் வலியுறுத்துகிறது. அத்துடன், வெள்ளச் சமவெளிகளில் கட்டுமானக் கழிவுகள், குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க, நேரடிப் பாதுகாப்பு மற்றும் சிசிடிவி கண்காணிப்பை அமைக்க இந்தத் திட்டத்தில் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், காடு வளா்ப்பு, பல அடுக்குத் தாவரப் பாதுகாப்புப் பகுதிகள், நகரக் காடுகளின் விரிவாக்கம் மற்றும் ஆரவல்லி மலைத்தொடரைப் பாதுகாத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் தில்லியின் பசுமைப் பரப்பை விரிவுபடுத்துவதற்கும் முக்கியத்துவம் அளிக்கிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.