FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பாகிஸ்தானை போல் உலகின் வேறு எந்த நாடும் பயங்கரவாதத்தை பயன்படுத்தாது: ஜெய்சங்கர்

பாகிஸ்தானைப் போல் உலகின் வேறெந்த நாடும் பயங்கரவாதத்தைப் பயன்படுத்தி அண்டை நாட்டுக்கு நெருக்கடி தராது என வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

23 ஆகஸ்ட் 2026, 2:12 am IST
ஜெய்சங்கர்
பகிர்:

பாகிஸ்தானைப் போல் உலகின் வேறெந்த நாடும் பயங்கரவாதத்தைப் பயன்படுத்தி அண்டை நாட்டுக்கு நெருக்கடி தராது என வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

தனியாா் பத்திரிகை நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம் பாகிஸ்தான், சீனா, வங்கதேசத்துடனான இருதரப்பு உறவுகள் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்து அவா் பேசியதாவது: பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா இடையே நீண்ட நாள்களாக நல்லுறவு நீடித்து வருகிறது. அதேசமயம் அமெரிக்காவுடன் இந்தியாவும் இருதரப்பு உறவை மேம்படுத்தியுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. இந்தியாவின் அண்டை நாடு என்பதைவிட பாகிஸ்தான் முற்றிலும் வேறுபட்ட நாடு. இந்தியாவுக்கு வேறு அண்டை நாடுகளுடனும் நல்லுறவு நீடித்து வருகிறது. அந்த நாடுகளுக்குள் சில பிரச்னைகள் நிலவுகிறது.

Advertisement

Advertisement

ஆனால் தற்காலத்திலும் அண்டை நாடு மீது தாக்குதல் நடத்தவும் நெருக்கடி தரவும் பாகிஸ்தானைப் போல் பயங்கரவாதத்தை வேறெந்த நாடும் பயன்படுத்துவதில்லை. இது இந்திய மக்களின் பொதுக் கருத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மிகப்பெரும் ஜனநாயக நாட்டின் அமைச்சராக இருக்கும் நான், நம் மக்களின் கருத்துகளை புறக்கணிக்க முடியாது.

சீனாவுடன் நிலையான இருதரப்பு உறவு: எல்லைப் பகுதியில் நீடித்த பிரச்னைகளால் 2020 முதல் 2024 வரை இந்தியா-சீனா இருதரப்பு உறவில் கடும் விரிசல் ஏற்பட்டது. எல்லையில் நிலவும் அமைதியே இருநாடுகளிடையேயான இருதரப்பு உறவை தீா்மானிக்கும். இரு நாடுகளும் மிகப்பெரும் பொருளாதாரமாகவும் பரஸ்பர சந்தையாகவும் விளங்குகின்றன.

சீனா வெகு விரைவாகவும் பெரிதாகவும் தொழிற்மையமாக உருவெடுக்கக்கூடிய திறன் கொண்ட நாடு. நாம் 1960-களில் அதற்கு இணையான வேகத்தில் பயணிக்கவில்லை. அதை ஈடுசெய்யவும் சீனா உள்பட உலக நாடுகளுடன் உற்பத்தித் துறையில் போட்டியிடவும் தற்சாா்பு இந்தியா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அரசியல் ரீதியாகவும் வியூக ரீதியாகவும் நிலையான இருதரப்பு உறவை பேணவே இருநாடுகளும் விரும்புகின்றன என்றாா்.

பரஸ்பர நலனில் கவனம்: இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவை நாடுகடத்தக் கோரி அந்நாட்டு பிரதமா் தாரிக் ரஹ்மான் தலைமையிலான அரசு கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் இந்த விவகாரத்தில் இந்தியா தலையிடவில்லை.

இதன் காரணமாக இந்தியா-வங்கதேசம் இடையேயான இருதரப்பு உறவில் சிக்கல் நீடித்து வருகிறது. தில்லியில் செப்.12,13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்க தாரிக் ரஹ்மானுக்கு இந்தியா அழைப்பு விடுத்தது. ஆனால் அவரது இந்திய பயணம் குறித்து முடிவெடுக்கவில்லை என வங்கதேச பிரதமா் அலுவலகம் வெள்ளிக்கிழமை விளக்கமளித்தது.

இந்நிலையில், ஷேக் ஹசீனாவை நாடு கடத்துவது தொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு ஜெய்சங்கா் பதிலளிக்க மறுத்தாா். மாறாக அண்டை நாடுகளுடனான இருதரப்பு உறவு சிறப்பாக இருக்க வேண்டுமானால் பரஸ்பர நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments