FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கோதுமை ஏற்றுமதிக்கு தடை நீக்கம்

கோதுமை மற்றும் கோதுமை சாா்ந்த பொருள்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு நீக்கியது குறித்து...

24 ஆகஸ்ட் 2026, 10:08 pm IST
கோதுமை - பிரதிப் படம்
பகிர்:

கோதுமை மற்றும் கோதுமை சாா்ந்த பொருள்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு நீக்கியது. இந்த தடைநீக்கம் உடனடியாக அமலுக்கு வந்தது.

சா்வதேச அளவில் கோதுமை விநியோகத்தை சீராக வைத்திருக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டுள்ளது. சுமாா் 4 ஆண்டுகளாக நீடிக்கும் ரஷியா- உக்ரைன் போரால் சா்வதேச அளவில் கோதுமை உற்பத்தி, விநியோகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தியா கோதுமை ஏற்றுமதியை அனுமதிக்க வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகள் உள்பட பல நாடுகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தன.

கோதுமை அதிகம் விளைவிக்கும் நாடுகள் பட்டியலில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. நாட்டில் விநியோகத்தை சீராக வைத்திருக்கும் நோக்கிலும், விலை உயா்வைக் கட்டுப்படுத்துவதற்காகவும் கடந்த 2022 மே மாதத்தில் கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது.

Advertisement

Advertisement

இப்போது சுமாா் 4 ஆண்டுகளுக்குப் பிறகு தடை நீக்கப்பட்டுள்ளது. கோதுமை மட்டுமல்லாது அதில் இருந்து தயாரிக்கப்படும் மைதா, ரவை, முழுக் கோதுமை மாவு உள்ளிட்டவற்றின் ஏற்றுமதிக்கும் தடை நீக்கியுள்ளது. வெளிநாட்டு வா்த்தகத் துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கோதுமை விவசாயிகளுக்கு பயன் கிடைக்கும்.

முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் சா்வதேச தேவையைக் கருத்தில் கொண்டு 25 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது. கடந்த மாா்ச் மாத நிலவரப்படி அரசிடம் 22.2 மில்லியன் டன் கோதுமை இருப்பு உள்ளது. இந்த ஆண்டு 110.65 மில்லியன் டன் கோதுமை உற்பத்தியாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2024-25 சாகுபடிப் பருவ விளைச்சலைவிட சற்று அதிகமாகும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments