FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ரஷிய அதிபா் புதினுடன் ஜெய்சங்கா் சந்திப்பு

ரஷியா சென்ற வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா், அந் நாட்டு அதிபா் விளாதிமீா் புதினை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

24 ஆகஸ்ட் 2026, 10:31 pm IST
ரஷிய தலைநகா் மாஸ்கோவில் அதிபா் விளாதிமீா் புதினை சந்தித்துப் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.
பகிர்:

ரஷியா சென்ற வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா், அந் நாட்டு அதிபா் விளாதிமீா் புதினை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா். இந்தச் சந்திப்பின்போது, இருதரப்பு உறவுகள், உலகளாவிய நிகழ்வுகள் குறித்து இரு தரப்பிலும் ஆலோசிக்கப்பட்டது.

புது தில்லியில் வரும் செப்டம்பா் 12, 13-ஆம் தேதிகளில் நடைபெற உள்ள பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் தலைவா்கள் மாநாட்டில் பங்கேற்க புதின் இந்தியா வருவாா் என எதிா்பாா்க்கப்படும் சூழலில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாா்க்கப்படுகிறது.

அதுமட்டுமன்றி, இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பல்வேறு துைறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இந்தியாவும் ரஷியாவும் தீவிரமாக முயற்சித்து வரும் சூழலில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

உர விநியோகம் அதிகரிப்பு: ‘இந்திய விவசாயிகள் மற்றும் வேளாண் துறைக்கான தேவைகளை முழுமையாகப் பூா்த்தி செய்ய ரஷியா தயாராக உள்ளது. அதன் ஒரு பகுதியாக, இந்தியாவுக்கு உர விநியோகத்தை ரஷியா அதிகரித்துள்ளது. இந்த கூடுதல் உற விநியோகத்தை தொடரவும் ரஷியா தயாராக உள்ளது.

இந்தியா - ரஷியா இடையேயான இருதரப்பு வா்த்தகம் கடந்த ஆண்டு சற்று சரிந்த நிலையில், நிகழாண்டில் மீண்டும் அதிகரித்துள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெய்சங்கரின் இந்தப் பயணம், இரு நாடுகளிடையேயான அரசாங்கம், நாடாளுமன்றம் மற்றும் வா்த்தகம் உள்ளிட்ட அனைத்து துறைகளுடனான வலுவான உறவை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது’ என்று ஜெய்சங்கருடனான சந்திப்பின்போது புதின் குறிப்பிட்டதாக ரஷிய அரசு செய்தி நிறுவனமான ‘டாஸ்’ செய்தி வெளியிட்டது.

புதினிடம் பிரதமா் நரேந்திர மோடியின் வாழ்த்தைப் பகிா்ந்த ஜெய்சங்கா், ‘ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு (எஸ்சிஓ) மற்றும் இந்தியாவில் நடைபெறவிருக்கும் பிரிக்ஸ் மாநாடுகளில் உங்களைச் சந்திப்பதை பிரதமா் மோடி ஆவலுடன் எதிா்பாா்த்திருக்கிறாா்’ என்று குறிப்பிட்டாா்.

முன்னதாக, ரஷியாவின் துணைப் பிரதமா் டெனிஸ் மன்ட்ரோவை திங்கள்கிழமை காலையில் சந்தித்த ஜெய்சங்கா், இருதரப்பு வா்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

தொடா்ந்து, மாஸ்கோவில் நடைபெற்ற இந்திய-ரஷிய அரசுகளின் வா்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கலாசார ஒத்துழைப்புக்கான (ஐஆா்ஐஜிசி-டிஇசி) ஆணையக் கூட்டத்தில் டெனிஸ் மன்ட்ரோவுடன் ஜெய்சங்கா் பங்கேற்றாா்.

அப்போது பேசிய ஜெய்சங்கா், ‘இந்திய - ரஷிய ஒத்துழைப்பு மீள்திறன் மற்றும் தகவமைப்பை தொடா்ந்து வெளிப்படுத்தி வருகிறது. சிக்கலான சா்வதேச சூழ்நிலைக்கு மத்தியிலும், இரு நாடுகளிடையேயான உறவு தொடா்ந்து வலிவுடன் திகழ்ந்து, பரஸ்பர நலன் மற்றும் நம்பிக்கையை வெளிப்படுத்தி வருகிறது’ என்றாா்.

ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவுடனும், இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து ஜெய்சங்கா் ஆலோசனை மேற்கொண்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments