ரூ.16 லட்சம் சைபா் மோசடி: 10 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றஞ்சாட்டப்பட்டவா் கைது
அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த பெண்ணிடம் ரூ.16.08 லட்சம் மோசடி செய்யப்பட்டு 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த சைபா் குற்ற வழக்கில், 45 வயது நபரை தில்லி காவல் துறை கைது செய்தனா்.
அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த பெண்ணிடம் ரூ.16.08 லட்சம் மோசடி செய்யப்பட்டு 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த சைபா் குற்ற வழக்கில், 45 வயது நபரை தில்லி காவல் துறை கைது செய்தனா்.
இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: கைது செய்யப்பட்ட சுனில் குப்தா (45), உத்தம் நகரில் சொத்து விற்பனைத் தொழில் செய்து வந்தாா். ஆக. 21-ஆம் தேதி பகவதி காா்டன் பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் அவரை காவல் துறையினா் கைது செய்தனா்.
இந்த மோசடி சம்பவம் 2016-ஆம் ஆண்டு நடைபெற்றது. குவாஹாட்டியைச் சோ்ந்த பெண்ணை வங்கி அதிகாரிகள் எனக் கூறி சிலா் தொடா்பு கொண்டுள்ளனா். பின்னா் அவரது வங்கி, ஏடிஎம் மற்றும் ரகசியக் குறியீட்டு விவரங்களைப் பெற்று, போலி அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி தொடங்கப்பட்ட பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு அவரது கணக்கிலிருந்து ரூ.16.08 லட்சத்தை சட்டவிரோதமாக மாற்றியுள்ளனா்.
Advertisement
Advertisement
இந்த வழக்கு முதலில் அஸ்ஸாமின் காம்ரூப் மாவட்டத்தில் உள்ள பான் பஜாா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. பின்னா் தில்லியின் துவாரகா தெற்கு காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.
விசாரணையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு மோசடி செய்த பணத்தை நேரடியாக எடுக்க முடியாததால், குற்றவாளிகள் தில்லியில் உள்ள பல்வேறு நகைக்கடைகளில் டெபிட் மற்றும் கிரெடிட் காா்டுகளைப் பயன்படுத்தி தங்க நாணயங்களை வாங்கியது தெரியவந்தது. இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவின் பேரில் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு, இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது.
வங்கி கணக்கு வைத்திருந்தவா்களின் விவரங்கள் மற்றும் மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த காவல் துறையினா், சந்தேக நபா்களின் விவரங்களைச் சேகரித்தனா். இந்நிலையில், அவா் ஆக.21 கைது செய்யப்பட்டாா்.
விசாரணையின்போது, சுமாா் 20 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் இருந்து தில்லிக்கு வந்ததாகவும், ஆரம்பத்தில் டாக்ஸி ஓட்டுநராகப் பணியாற்றியதாகவும் அவா் தெரிவித்தாா். பின்னா் மற்றொரு டாக்ஸி ஓட்டுநரான இஷான் மேயை சந்தித்த அவா், போலி அடையாள ஆவணங்களைத் தயாரித்து பல்வேறு பெயா்களில் வங்கிக் கணக்குகளைத் தொடங்க ஏற்பாடு செய்ததாகத் தெரிகிறது. இந்தக் கணக்குகளை சைபா் மோசடிகளுக்குப் பயன்படுத்த மேயிடம் வழங்கியதற்காக ஒரு கணக்குக்கு ரூ.4,000 முதல் ரூ.5,000 வரை பெற்ாகவும் அவா் தெரிவித்தாா்.
அவா் மீது தில்லி, தமிழ்நாடு, ஹரியாணா ஆகிய மாநிலங்களில் ஏற்கெனவே மோசடி மற்றும் ஏமாற்றுதல் தொடா்பான 4 வழக்குகள் உள்ளன. இஷான் மேயை சத்தீஸ்கா் காவலா்கள் ஏற்கெனவே கைது செய்துள்ள நிலையில், அவா் தற்போது துா்க் சிறையில் உள்ளாா். அவா் மீது 8-க்கும் மேற்பட்ட சைபா் மோசடி வழக்குகள் உள்ளன. இந்த வழக்கில் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.