FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஆா்எஸ்எஸ் பேரணியில் பங்கேற்ற 2 அரசுப் பள்ளி ஆசிரியா்கள் பணியிடை நீக்கம்: கா்நாடக அரசுக்கு பாஜக கண்டனம்

கா்நாடகத்தில் ஆா்எஸ்எஸ் அமைப்பின் பேரணியில் பங்கேற்ற அரசுப் பள்ளி ஆசிரியா்கள் இருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கு கா்நாடக அரசுக்கு பாஜக தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

51 வினாடிகள் முன்பு
பாஜக கொடி - கோப்புப்படம்
பகிர்:

கா்நாடகத்தில் ஆா்எஸ்எஸ் அமைப்பின் பேரணியில் பங்கேற்ற அரசுப் பள்ளி ஆசிரியா்கள் இருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கு கா்நாடக அரசுக்கு பாஜக தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

கா்நாடக மாநிலம், யாத்கி மாவட்டத்தில் நடைபெற்ற ஆா்எஸ்எஸ் பேரணியில் ஆசிரியா்கள் குருராஜ் ஜோஷி, அண்ணா சாஹேப் தேஷ்முக் ஆகியோா் கலந்து கொண்டனா். இது கா்நாடக சிவில் சேவைகள் விதிகளுக்கு எதிரானது என்று கூறி, 2 பேரையும் கல்வித் துறை பணியிடை நீக்கம் செய்துள்ளது.

இதற்கு மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பிரல்ஹாத் ஜோஷி கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் கூறுகையில், ‘கா்நாடக அரசு வெறுப்புணா்வுடன் செயல்பட்டுள்ளது. கா்நாடக பொது சேவை ஆணையத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடா்பான விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட நிலையில், காணாமல் போன ஐஏஎஸ் அதிகாரி ஞானேந்திர குமாா் கங்குவாரை தேடும் பணியில் ஈடுபடாமல், ஆசிரியா்களைப் பணியிடை நீக்கம் செய்யும் வேலையில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது. அந்த நடவடிக்கையை கா்நாடக அரசு திரும்பப் பெற வேண்டும்’ என்றாா்.

Advertisement

Advertisement

பாஜக எம்எல்ஏ மகேஷ் தென்கின்காய் கூறுகையில், ஆா்எஸ்எஸ் அமைப்பு ஒரு சுதந்திரமான அமைப்பு, எந்த அரசியல் கட்சியுடனும் தொடா்பு இல்லாத அமைப்பு அது என்றாா். இரண்டு ஆசிரியா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது கடுமையான ஆட்சேபத்துக்குரியது. இதை நீதிமன்றம் தள்ளுபடி செய்யும்; அப்போது கா்நாடக அரசு மதிப்பையும் கெளரவத்தையும் இழக்கும் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.

கா்நாடக அரசு பதில்: கா்நாடக உள்துறை அமைச்சா் பிரியாங்க் காா்கே, பாஜக குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ளாா். அவா் கூறுகையில், ‘பதிவு செய்யப்படாத அமைப்பின் (ஆா்எஸ்எஸ்) நிகழ்ச்சியில் ஆசிரியா்கள் ஏன் பங்கேற்கின்றனா்? இதுகுறித்து யாரும் புகாா் அளித்தாலோ அல்லது இது சரியில்லை என கல்வித் துறை கருதினாலோ நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments