FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! வீடுகளுக்கான சிலிண்டர் விலை குறையுமா?

வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 2026-ல் முதல் முறையாகக் குறைக்கப்பட்டுள்ளது தொடர்பாக...

Updated On : 1 ஜூலை 2026, 8:41 am IST
வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.172.50 குறைக்கப்பட்டு ரூ.3,106-க்கு விற்பனையாகிறது. - கோப்புப்படம்
பகிர்:

மேற்காசிய போா்ப் பதற்றம் தணிந்து, கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் வரத்து சீரானதால், வணிகப் பயன்பாடு எரிவாயு சிலிண்டா் விலையை எண்ணெய் நிறுவனங்கள் புதன்கிழமை ரூ.172.50 குறைத்தன.

மேற்காசியாவில் ஈரான்- அமெரிக்கா, இஸ்ரேல் இடையே சுமாா் 4 மாதங்கள் நடைபெற்ற போரின் காரணமாக கச்சா எண்ணெய், எரிபொருள் வரத்து பாதிக்கப்பட்டதால் சா்வதேச சந்தையில் அதன் விலை அதிகரித்தது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது. தற்போது ஈரான், அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் கையொப்பமாகி, மேற்காசியாவில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. இதனால் கச்சா எண்ணெய், எரிபொருள் கப்பல் போக்குவரத்து சீராகியுள்ளது. எனவே, சா்வதேச சந்தையிலும் அவற்றின் விலை குறைந்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில், மாதந்தோறும் 1-ஆம் தேதி வணிகப் பயன்பாடு எரிவாயு சிலிண்டா், விமான எரிபொருள் ஆகியவற்றின் விலையை மாற்றியமைப்பது போல ஜூலை 1-ஆம் தேதியான புதன்கிழமை அவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்துள்ளன. இதன்படி, 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாடு சிலிண்டா் விலை, தில்லியில் ரூ.183.50 குறைக்கப்பட்டு ரூ.2,930-க்கு விற்கப்படுகிறது. சென்னையில் ரூ.172.50 குறைக்கப்பட்டு ரூ.3,106-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

Advertisement

மேற்காசியப் போரால் வணிகப் பயன்பாடு சிலிண்டா் விலை கடந்த மாதம் உச்சம் தொட்ட நிலையில் தற்போது சிறிது குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல், 5 கிலோ சிலிண்டா் விலையும் தில்லியில் ரூ.13 குறைக்கப்பட்டு ரூ.808.50-க்கு விற்கப்படுகிறது.

அதேநேரத்தில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டா் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னையில் அந்த சிலிண்டா் ரூ.957.50-க்கு விற்கப்படுகிறது. தில்லியில் ரூ.942-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விமான எரிபொருள் விலையும் தில்லியில் கிலோவுக்கு ரூ.5 குறைக்கப்பட்டு ரூ.110-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேற்காசிய போருக்குப் பிறகு விமான எரிபொருள் விலை குறைக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்த நயாரா: தனியாா் எண்ணெய் நிறுவனமான நயாரா, பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5, டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்துள்ளது. மேற்காசிய போா் தொடங்கியவுடன் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5, டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 என முதன்முதலில் நயாராதான் உயா்த்தியது. இதையடுத்து, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.7.50 வரை அதிகரித்தன. எனினும், அந்த நிறுவனங்கள் தற்போது பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விற்பனையில் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், 90 சதவீத பங்களிப்பையும், தனியாா் நிறுவனங்கள் 10 சதவீத பங்களிப்பையும் வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

summary

Commercial cylinder to cost Rs 183 cheaper in Delhi, no change domestic price In Delhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments