ஏர் இந்தியா எரிபொருள் கூடுதல் கட்டணம் குறைப்பு: சர்வதேச விமானக் கட்டணங்கள் குறைய வாய்ப்பு!
ஏர் இந்தியா எரிபொருள் கூடுதல் கட்டணம் குறைப்பு தொடர்பாக...
புது தில்லி: சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் விமான எரிபொருள் விலை குறைந்ததைத் தொடர்ந்து, ஏர் இந்தியா தனது எரிபொருள் கூடுதல் கட்டணத்தை ஜூலை 1 முதல் கணிசமாகக் குறைந்துள்ளது.
ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து வழித்தடங்களுக்கான சர்வதேச எரிபொருள் கூடுதல் கட்டணத்தை 38 சதவீதமும், ஆஸ்திரேலியா மற்றும் வட அமெரிக்க வழித்தடங்களுக்கான கட்டணத்தை 28.5 சதவீதம் குறைப்பதாக ஏர் இந்தியா புதன்கிழமை அறிவித்துள்ளது. இதனால் சர்வதேச விமானக் கட்டணங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு ஆசியாவில் நெருக்கடி தொடங்கியதிலிருந்து கடந்த நான்கு மாதங்களாக பெரும்பாலான சர்வதேச வழித்தடங்களில் விதிக்கப்பட்ட அதிகப்படியான விமானக் கட்டணங்களிலிருந்து பயணிகளுக்குச் சற்று நிம்மதி கிடைக்கவுள்ளது.
Advertisement
Advertisement
விமானக் கட்டணத்தின் முக்கிய அங்கமான எரிபொருள் கூடுதல் கட்டணத்தை ஏர் இந்தியா நிறுவனம் ஜூலை 1 முதல் குறைத்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு இந்தச் சலுகையை வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதால், பிற விமான நிறுவனங்களும் விரைவில் இதைப் பின்பற்றக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூன் 30 ஆம் தேதி கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 70 டாலருக்கும் (ரூ. 6,666) குறைவாகக் குறைந்தது; பிப்ரவரி 28 ஆம் தேதி மேற்கு ஆசிய மோதல் தொடங்கியதிலிருந்து இதுவே மிகக் குறைந்த விலை குறைப்பாகும்.
ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து வழித்தடங்களுக்கான சர்வதேச எரிபொருள் கூடுதல் கட்டணத்தை 38 சதவீதமும், ஆஸ்திரேலியா மற்றும் வட அமெரிக்க வழித்தடங்களுக்கான கட்டணத்தை 28.5 சதவீதமும் குறைப்பதாக ஏர் இந்தியா புதன்கிழமை அறிவித்தது.
இந்தக் கட்டணக் குறைப்பு வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் பயனளிக்கும். சிறிய அளவிலான கட்டணம் குறைப்பாக இருந்தாலும், அது வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிடத்தக்க சேமிப்பாக இருக்கும். உதாரணமாக, ரூ.1 லட்சம் விமானக் கட்டணத்தில் 10 சதவீத குறைப்பு என்பது ஒரு பயணிக்கு ரூ.10,000 சேமிப்பிற்குச் சமமாகும் என்று கூறப்படுறது.
ஏப்ரல் 10 ஆம் தேதி நள்ளிரவு முதல் ஐரோப்பாவிற்கான (இங்கிலாந்து உள்பட) எரிபொருள் கூடுதல் கட்டணத்தை ஒரு பயணியருக்கு 205 டாலராக (ரூ.19,520) உயர்த்துவதாக ஏர் இந்தியா அறிவித்திருந்தது. தற்போது இது 125 டாலராக (ரூ.11,900) குறைக்கப்பட்டுள்ளது. வட அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கான கூடுதல் கட்டணம் 280 டாலராக (ரூ. 26,664) இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 200 டாலராக குறைக்கப்படுவது குறிப்பிடத்தக்கவை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இண்டிகோ
இந்த விவகாரம் குறித்து இண்டிகோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. இந்தியாவின் மூன்று முக்கிய சர்வதேச விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோவும் தனது சர்வதேச கட்டணத்தைக் குறைக்க வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது; ஏனெனில், இத்தகைய பலன்களைப் மக்களுக்குச் சென்றடையச் செய்ய வேண்டும் என்பது அரசின் கட்டாயமாகும் என்று வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
கட்டணக் குறைப்பு விவகாரம் குறித்துப் பின்னர் பதிலளிப்பதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
ஸ்பைஸ்ஜெட்
சர்வதேச அளவில் துபாய்க்கு விமானங்களை இயக்கும் ஸ்பைஸ்ஜெட், சர்வதேச கூடுதல் கட்டணத்தில் முன்பு எந்த உயர்வையும் அமல்படுத்தவில்லை. "நெருக்கடி உச்சத்தில் இருந்தபோது நாங்கள் விலையை உயர்த்தவில்லை. எனவே, இது எங்களுக்குப் பொருந்தாது." என தெரிவித்துள்ளது.
உள்நாட்டு விமான எரிபொருள் விலையும் ஜூலை 1 முதல் கிலோ லிட்டருக்கு ரூ. 1.25 லட்சத்திலிருந்து ரூ. 1.10 லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த விலை குறைப்பின் பலன் வாடிக்கையாளர்களுக்கு கிடைப்பதற்கான வாய்ப்பு குறைவு என்று விமான நிறுவன வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓமன், குவைத் நாடுகளுக்கு மீண்டும் விமான சேவை
ஓமனின் சலாலா மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்கான சேவைகளை மீண்டும் தொடங்கியதன் மூலம், தனது மேற்கு ஆசிய நெட்வொர்க்கில் உள்ள அனைத்து இடங்களுக்குமான விமான இணைப்பை மீட்டெடுத்துள்ளதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
கோழிக்கோடு-சலாலா வழித்தடத்தில் ஜூலை 2 முதல் விமானங்கள் மீண்டும் இயக்கப்படுகின்றன. கோழிக்கோடு-குவைத் இடையிலான சேவைகள் இன்று முதல் (ஜூலை 3) தொடங்குகின்றன; பெங்களூரு-குவைத் இடையிலான விமானங்கள் ஜூலை 4-ல் தொடங்குகின்றன. வரும் நாள்களில் இவற்றின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும்.
கோழிக்கோடு-சலாலா சேவை வாரத்திற்கு இருமுறை இயக்கப்படும். கோழிக்கோடு மற்றும் குவைத் இடையிலான சேவைகள் ஜூலை 3 முதல் வாரத்திற்கு ஒருமுறை இயக்கப்படும் என அறிவித்துள்ளது.
The fuel surcharge cess, a crucial component of the air fare, has been reduced by the Air India from July 1.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.