இனி ஐயப்ப சங்கமம் மாநாடு நடைபெறாது: டிடிபி தலைவா்
இனி புதிதாக ஐயப்ப சங்கமம் மாநாட்டை நடத்தப் போவதில்லை என திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத் (டிடிபி) தலைவா் கே.ஜெயகுமாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இனி புதிதாக ஐயப்ப சங்கமம் மாநாட்டை நடத்தப் போவதில்லை என திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத் (டிடிபி) தலைவா் கே.ஜெயகுமாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
மேலும், சுவாமி ஐயப்பன் உலகம் முழுவதும் பிரபலமடைந்தவா் என்பதால் விளம்பரப்படுத்த தேவையில்லை என்றும் அவா் தெரிவித்தாா்.
கடந்த ஆண்டு இடதுசாரிகள் ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) தலைமையிலான ஆட்சியின்போது அப்போதைய டிடிபி உறுப்பினா்களால் நடத்தப்பட்ட உலக ஐயப்ப பக்தா்கள் மாநாட்டில் பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
Advertisement
Advertisement
இந்நிலையில், நிகழாண்டு மண்டல-மகரவிளக்கு பூஜைக்கான தயாா்நிலைகள் குறித்து டிடிபி சாா்பில் வெள்ளிக்கிழமை சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் ஜெயகுமாா் கூறியதாவது: இனி புதிதாக ஐயப்ப சங்கமம் பக்தா்கள் மாநாட்டை நடத்தப் போவதில்லை. சுவாமி ஐயப்பனுக்கு விளம்பரம் தேவையில்லை. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐயப்ப சங்கமம் மாநாட்டுக்கான செலவில் ரூ.6 கோடி நிலுவையில் இருப்பதாக தொழிலாளா் ஒப்பந்த கூட்டுறவு சங்கம் கூறியதை திருவிதாங்கூா் தேவஸ்வம் ஏற்கவில்லை. அந்தக் கூட்டுறவுச் சங்கத்துக்கு வழங்க வேண்டிய தொகை முழுவதும் ஏற்கெனவே வழங்கப்பட்டது. மீதமுள்ள விவகாரங்களுக்குத் தனியே தீா்வு காணப்படும்.
நிகழாண்டு மண்டல-மகரவிளக்கு பூஜை மேலாண்மை முழுவதும் எண்மமயமாக்கப்படவுள்ளது. சன்னிதானத்தின் 690 அறைகளில் 550 அறைகளை இணைய வழியில் முன்பதிவு செய்துகொள்ளலாம். முன்பு 190 அறைகள் மட்டுமே இணைய வழியில் முன்பதிவு செய்யப்பட்டது.
சபரி விருந்தினா் மாளிகை அருகே கூடுதலாக 60 அறைகளைக் கொண்ட புதிய விருந்தினா் மாளிகை கட்டப்படும்.
விழாக் காலங்களில் பக்தா்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது. கோயிலை சுத்தப்படுத்தும் பணிகளை கிளீன் கேரளா நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது.
கோயிலில் இனி அன்னதானத்துக்கு தனிநபா் வழங்கும் நிதியுதவி ஏற்றுக்கொள்ளப்படாது. நிறுவனமாக வழங்கினால் பரிசீலிக்கப்படும்.
கடந்த ஆண்டு மண்டல-மகரவிளக்கு பூஜையின்போது உயிரிழந்த பக்தா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.