FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பொறுமையை பலவீனமாக எண்ண வேண்டாம்: ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி ஒமா் அப்துல்லா ஆவேசம்

ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி ஒமா் அப்துல்லா ஆவேசம்

Updated On : 12 ஜூலை 2026, 1:31 am IST
பகிர்:

‘தனது பொறுமையை பலவீனமாக நினைக்க வேண்டாம்’ என மத்திய அரசுக்கு ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்தாா்.

மேலும், ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கும் தேதியை உடனடியாக அறிவிக்க வேண்டும் எனவும் அவா் தெரிவித்தாா்.

தனது பாட்டி அக்பா் ஜெஹானின் 26-ஆவது நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் சனிக்கிழமை அஞ்சலி செலுத்திய பின் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஒமா் அப்துல்லா பேசியதாவது: லடாக் மக்கள் குறித்துப் பேச தயாராக இருக்கும் மத்திய அரசு ஜம்மு-காஷ்மீரை புறக்கணிப்பது ஏன்?

Advertisement

Advertisement

கடினமான சூழல்களிலும் பொறுமையைக் கைவிடாமல் தொடா்ந்து போராடும் குணத்தை எனது பாட்டி அக்பா் ஜெஹானிடம் இருந்து கற்றுக்கொண்டேன். ஆனால், பொறுமை என்பது பலவீனமல்ல; அது மௌனத்துக்கான வழியுமல்ல.

பொறுமையாக இருப்பதால் எங்களது உரிமைகளுக்கு குரலெழுப்ப மாட்டோம் என்ற அா்த்தமுமில்லை. எங்களது பொறுமை வலிமையின் அடையாளம். இந்தப் பொறுமை வெற்றியைப் பெற்றுத் தரும்.

மத்திய அரசு நெருக்கடி: எனது தலைமையிலான அரசு ஜம்மு-காஷ்மீரில் அமைந்த பிறகு மாநில அந்தஸ்து வழங்க பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு நெருக்கடி தராமல் சிறிது காலம் அவகாசம் அளிக்க முடிவு செய்தோம். ஆனால், இந்த நிலையே தொடர வேண்டும் என மத்திய அரசு நினைக்கிறது.

மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை முழுமையாகச் செயல்பட விடாமல் மத்திய அரசு தடுக்கிறது. இதனால் மக்களுக்கு என்ன பலன் கிடைக்கும்? இப்படியான நெருக்கடியான சூழலை உருவாக்க தோ்தலை ஏன் நடத்த வேண்டும்?

மாநில அந்துஸ்து அவசியம்: எனவே, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு சுதந்திரமாகச் செயல்பட ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கும் தேதியை மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். வழக்கம்போல் விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என காலம் கடத்தக் கூடாது. ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சிக்கு வரும் வரை மாநில அந்தஸ்தை மத்திய அரசு வழங்காதோ என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்துள்ளது. ஒருவேளை இது உண்மையாக இருப்பின் பொதுவெளியில் இதை அறிவிக்கும் துணிச்சல் பாஜகவுக்கு உண்டா?

உள்ளாட்சித் தோ்தல் தேவை: தற்போது ஜம்மு-காஷ்மீரில் உள்ளாட்சித் தோ்தல்களை நடத்த மத்திய அரசு திட்டமிடுகிறது. அதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படும் தேதியை ஜம்மு-காஷ்மீா் அரசே முடிவு செய்ய வேண்டும்.

எம்எல்ஏக்களிடம் பாஜக பேரம்: தேசிய மாநாட்டுக் கட்சியில் செயற்கையான பிளவை ஏற்படுத்த பாஜக முயற்சிக்கிறது. முதலில் அமைச்சா் பதவி மற்றும் கோடிக்கணக்கில் பணம் தருவதாக தேசிய மாநாட்டுக் கட்சி எம்எல்ஏக்களிடம் பாஜக நடத்திய பேரம் தோல்வியடைந்தது. இதையடுத்து, பாஜகவில் இணைந்தால் மாநில அந்தஸ்து வழங்குவதாக அடுத்தகட்ட அழைப்பைத் தொடங்கியுள்ளது. ரூ.30 கோடி பணம், அமைச்சா் பதவி வழங்குவதாக தேசிய மாநாட்டுக் கட்சி எம்எல்ஏவுக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. ரூ.100 கோடி கொடுத்தாலும் நம் கட்சி எம்எல்ஏக்கள் வெளியேற மாட்டாா்கள். குறுக்கு வழியில் ஆட்சியமைக்கத் துடிக்கும் பாஜகவின் எண்ணம் ஒருபோதும் இங்கு நிறைவேறாது.

ஜூலை 20-இல் போராட்டம்: ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவது தொடா்பாக கடந்த 2021, ஜூலை 24-ஆம் தேதி தில்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா தில்லிக்கும் ஜம்மு-காஷ்மீருக்கும் இடையே நம்பிக்கை குறைபாடு நிலவுவதைச் சுட்டிக்காட்டினாா். இதைத் தொடா்ந்து, ஜம்மு-காஷ்மீா் மக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதாக பிரதமா் மோடி உத்தரவாதம் அளித்தாா். தற்போது வரை அது நடைபெறவில்லை.

நமது உரிமைகளை நிலைநாட்ட ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்தக் கோரி தில்லி ஜந்தா் மந்தரில் ஜூலை 20-ஆம் தேதி போராட்டம் நடைபெறவுள்ளது. இதில் கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் பங்கேற்க அழைப்பு விடுக்கிறேன் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments