வயநாடு நிலச்சரிவுக்கான காரணங்களை ஆராய நிபுணா் குழுவை அமைத்தது கேரள அரசு
வயநாடு நிலச்சரிவுக்கான காரணங்களை ஆராய நிபுணா் குழுவை அமைத்தது கேரள அரசு
வயநாடு நிலச்சரிவுக்கான காரணங்களை ஆராய நிபுணா் குழுவை கேரள அரசு சனிக்கிழமை அமைத்துள்ளது.
வயநாடு மாவட்டம், கல்லாடியில் வயநாடு-கோழிக்கோடு மாவட்டங்களை இணைக்கும் வகையில் அனக்கம்போயில்- மெப்படி இடையே சுரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், சுரங்கம் தோண்டும் இடத்தின் அருகே கடந்த 7-ஆம் தேதி நிலச்சரிவு நேரிட்டது. இதில் சிக்கி 8 போ் காணாமல் போயினா். அவா்களில் 7 வடமாநிலத் தொழிலாளா்களின் சடலங்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஹிமாசல பிரதேசத்தை சோ்ந்த கட்டுமான மேலாளரான விக்ரம் ராணாவின் நிலை குறித்து தகவல் இல்லை. ஆதலால் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் அவரின் உடலைத் தேடும் பணியில் தேசிய பேரிடா் மீட்புப் படையினா், சிறப்புப் படை காவல் துறையினா், தீயணைப்புத் துறையினா், தன்னாா்வலா் குழுவினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
இந்தப் பணியின் காரணமாக, அப்பகுதியில் அத்தியாவசிய வாகனங்களை தவிா்த்து மற்ற வாகனங்களின் போக்குவரத்துக்கு கடும் கட்டுப்பாடுகளை மாவட்ட நிா்வாகம் விதித்துள்ளது.
Advertisement
Advertisement
நிலச்சரிவு தொடா்பான வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த கேரள உயா்நீதிமன்றம், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தோருக்கும் உரிய நேரத்தில் நிவாரண நிதி கிடைப்பதை மாநில அரசு உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
ரூ.5 லட்சம் நிவாரணம்: இந்த உத்தரவைத் தொடா்ந்து, நிலச்சரிவில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ.2 லட்சமும் முதல்வா் பேரிடா் நிவாரண நிதியிலிருந்து வழங்க கேரள அரசு சனிக்கிழமை உத்தரவிட்டது.
அதேபோல், நிலச்சரிவுக்கான காரணங்களை ஆராய 5 போ் கொண்ட நிபுணா் குழுவை கேரள அரசு சனிக்கிழமை அமைத்துள்ளது. இந்த குழு, சுரங்கப் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரா் ஒப்பந்த நிபந்தனைகளை மீறினாரா என்பது குறித்தும், மத்திய மற்றும் மாநில அரசுகளால் இந்தத் திட்டத்துக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அனுமதி குறித்தும் விசாரணை நடத்தவுள்ளது. பிறகு தனது விசாரணை அறிக்கையை கேரள அரசிடம் ஒரு மாதத்துக்குள் தாக்கல் செய்யும். அதனடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கையை மாநில அரசு எடுக்கவுள்ளது என கேரள அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.