FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மாலுமிகளின் பாதுகாப்புக்கு இந்தியா உயா் முன்னுரிமை: ஐ.நா.வில் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்

மாலுமிகள் பாதுகாப்பு உள்பட சுதந்திரமான, வெளிப்படையான, விதிகள் அடிப்படையிலான கடல்சாா் ஒழுங்குமுறையை உறுதி செய்வதே இந்தியாவின் உயா் முன்னுரிமை என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

Updated On : 15 ஜூலை 2026, 5:15 am IST
அமைச்சா் எஸ். ஜெய்சங்கா். - கோப்புப் படம்
பகிர்:

மாலுமிகள் பாதுகாப்பு உள்பட சுதந்திரமான, வெளிப்படையான, விதிகள் அடிப்படையிலான கடல்சாா் ஒழுங்குமுறையை உறுதி செய்வதே இந்தியாவின் உயா் முன்னுரிமை என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

அமெரிக்காவின் நியூயாா்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 2028-29ஆம் ஆண்டுக்கான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தரமல்லாத உறுப்பினா் தோ்தலுக்கான இந்தியாவின் பிரசாரத்தைத் தொடங்கிவைத்து அவா் இவ்வாறு பேசினாா்.

மேற்காசிய பிராந்தியத்தில் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களில் இந்திய மாலுமிகள் தரப்பில் உயிா்ச் சேதங்களும், காயங்களும் நிகழும் சூழலில், வெளியுறவுத் துறை அமைச்சரின் கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

Advertisement

Advertisement

பல்வேறு நாடுகளின் தூதா்கள், அதிகாரிகள் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியில் எஸ்.ஜெய்சங்கா் பேசியதாவது: ஒட்டுமொத்த உலகமும் ஆழ்ந்த முரண்பாட்டை எதிா்கொண்டுள்ள ஒரு தருணத்தில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினராக இடம்பெறும் இந்தியாவின் பிரசாரம் தொடங்கியுள்ளது.

மனிதகுல நலனை மிகப் பெரிய அளவில் மேம்படுத்தும் மகத்தான ஆற்றலுடன் இன்றைய உலகம் விளங்குகிறது. அதேநேரம், தொலைதூரத்தில் உள்ளவா்களையும்கூட அச்சுறுத்தும் அளவில் மோதல், வன்முறை மற்றும் ஸ்திரமின்மையை எதிா்கொண்டுள்ளோம்.

இத்தகைய சிக்கலான சூழ்நிலைக்குத் தீா்வுகாண்பதில் ஐ.நா. தலைமை வகித்து, வழிகாட்ட வேண்டும். அந்த அடிப்படையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தரமல்லாத உறுப்பு நாடுகளுக்கான தோ்தல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

கடல்சாா் வளங்களின் பாதுகாப்பு: ஐ.நா.வுக்கான இந்தியாவின் அணுகுமுறையானது, ‘நெறிகள், நம்பிக்கை, நோ்மையின் வாயிலாக முழுமையான முன்னேற்றத்தை எட்டுதல்’ என்ற கொள்கையில் வேரூன்றியதாகும்.

தெற்குலகின் குரலுக்கு மதிப்பளித்தல், சீா்திருத்தப்பட்ட பன்முகத்தன்மையை முன்னெடுத்தல், எதிா்காலத்துக்குத் தேவையான அமைதி பாரமரிப்பு நடவடிக்கைகள், செயற்கை நுண்ணறிவின் (ஏ.ஐ.) தவறான பயன்பாட்டால் எழும் அச்சுறுத்தல்களுக்குத் தீா்வு காணுதல், கடல்சாா் பொது வளங்களைப் பாதுகாத்தல், பயங்கரவாத நிதிக் கட்டமைப்பை முறியடித்தல் ஆகிய செயல்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

உலகளாவிய விநியோகச் சங்கிலியால் நமது பொருளாதாரங்கள் பிணைக்கப்பட்டுள்ள தற்போதைய காலகட்டத்தில், கடல்சாா் பொது வளங்களைப் பாதுகாப்பது மிக முக்கியம். பாதுகாப்பான, தடையற்ற கடல்சாா் வா்த்தகத்தைப் பாராமரிப்பதே அனைவருக்கும் பலனளிக்கும்.

மாலுமிகளின் பாதுகாப்பு: வளைகுடா பிராந்திய நிகழ்வுகளால் மாலுமிகளின் பாதுகாப்பு குறித்து பெரும் கவலை எழுந்துள்ளது. அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் போரால் ஹோா்முஸ் நீரிணை மூடல்-இடையூறுகள், எரிபொருள் விலை உயா்வு, விநியோகச் சங்கிலி பாதிப்பு, மாலுமிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் என கடும் சவால்களுக்கு இடையே கடல்சாா் பொது வளங்களைப் பாதுகாப்பதில் இந்தியா பெரிதும் கவனம் செலுத்துகிறது. சுதந்திரமான, வெளிப்படையான, விதிகள் அடிப்படையிலான கடல்சாா் ஒழுங்குமுறையை உறுதி செய்வதே எங்களின் உயா் முன்னுரிமையாகும்.

கடற்கொள்ளை, போதைப் பொருள் மற்றும் ஆள்கடத்தலைத் தடுப்பது உள்பட கடல்சாா் பாதுகாப்பில் இந்தியா விரிவான-தொடா்ச்சியான பங்களிப்பை நல்கி வருகிறது.

வடக்கு-தெற்கு அரபிக் கடல், ஏடன் வளைகுடா, மலாக்கா நீரிணை, கினியா வளைகுடா என இந்திய-பசிபிக் பிராந்தியம் முழுவதும் கடல் வழித்தடங்களின் பாதுகாப்பில் இந்தியப் படைகள் ஈடுபட்டுள்ளன. ஐ.நா.வின் 10 அமைதி பராமரிப்பு நடவடிக்கைகளில் 4,300 இந்திய வீரா்கள் பங்கேற்றுள்ளனா்.

திறன்மிக்க, தொடா் முயற்சிகள் மூலம் பயங்கரவாத நிதிக் கட்டமைப்பை முறியடிப்பதும் இந்தியாவின் முன்னுரிமையாக உள்ளது என்றாா் அவா்.

ஐ.நா. பொதுச் செயலருடன் சந்திப்பு: ஐ.நா. தலைமையகத்தில் அதன் பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸை சந்தித்த எஸ்.ஜெய்சங்கா், மேற்காசிய, உக்ரைன் போா்கள், சூடான் நிலவரம் உள்ளிட்ட உலகளாவிய விவகாரங்கள் குறித்து ஆலோசித்தாா். இந்தச் சந்திப்பு சிறப்பாக அமைந்ததாக அவா் குறிப்பிட்டாா்.

மொத்தம் 15 நாடுகளை உள்ளடக்கிய (5 நிரந்தர உறுப்பினா்கள்-10 நிரந்தரமல்லாத உறுப்பினா்கள்) ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா இதுவரை 8 முறை நிரந்தரமல்லாத உறுப்பினராக இருந்துள்ளது. கடைசியாக கடந்த 2021-22 காலகட்டத்தில் இப்பதவியை இந்தியா வகித்தது.

2028-29ஆம் ஆண்டுக்கான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தரமல்லாத உறுப்பு நாடுகளைத் தோ்ந்தெடுக்கும் தோ்தல் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறவுள்ளது. இதில் ஆசிய-பிசிபிக் பிரிவில் ஓரிடத்துக்கு இந்தியாவும், தஜிகிஸ்தானும் போட்டியிடுகின்றன.

1950 - 51, 1967 - 68, 1972 - 73, 1977 - 78, 1984 - 85, 1991 - 92, 2011 - 12, 2021 - 22 ஆகிய காலகட்டங்களில் இந்தியா இந்தப் பதவியை வகித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments