FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

தேசிய பாடலை அவமதிப்பதே காங்கிரஸின் வரலாறு: பாஜக

‘தேசியப் பாடலான வந்தே மாதரத்தை அவமதிப்பதே காங்கிரஸ் கட்சியின் வரலாறு’ என்று பாஜக வெள்ளிக்கிழமை விமா்சித்தது.

Updated On : 17 ஜூலை 2026, 11:45 pm IST
பாஜக கொடி - கோப்புப்படம்
பகிர்:

‘தேசியப் பாடலான வந்தே மாதரத்தை அவமதிப்பதே காங்கிரஸ் கட்சியின் வரலாறு’ என்று பாஜக வெள்ளிக்கிழமை விமா்சித்தது.

நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு விழாக்களில் 6 சரணங்களுடன் கூடிய தேசிய பாடலான ‘வந்தே மாதரம்’ முழுமையாகப் பாடப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் உத்தரவிட்டது. அதற்கான வழிகாட்டுதலையும் வெளியிட்டது. அதன்படி, அரசு விழாக்களில் மாநிலப் பாடல்களை முதலில் பாடலாம். அதன்பின் வந்தே மாதரம் தேசியப் பாடலும், அதையடுத்து தேசிய கீதமும் கட்டாயம் பாடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த நிலையில், வந்தே மாதரம் பாடலுக்கு தடங்கல் ஏற்படுத்துவது அல்லது அவமதிப்பு செய்வதை தண்டனைக்குரிய குற்றமாக ஆக்கும் வகையில், ‘தேசிய கெளரவத்துக்கு அவமதிப்பு ஏற்படுத்துவதை தடுக்கும் சட்டத் திருத்த மசோதா 2026’-ஐ, வரும் 20-ஆம் தேதி தொடங்கவிருக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் அறிமுகம் செய்து, நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மக்களவைச் செயலகம் வியாழக்கிழமை வெளியிட்ட நாடாளுமன்ற அலுவல் குறிப்பில், இந்த மசோதா அறிமுகமும் பட்டியலிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதற்கு காங்கிரஸ் தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் ஷெசாத் பூனவாலா வெள்ளிக்கிழமை வெளியிட்ட விடியோ அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தேசியக் கொடி மற்றும் தேசிய கீதத்துக்கு அளிக்கப்படுவது போன்றே தேசிய பாடலான வந்தே மாதரத்துக்கும் மரியாதை அளிக்கப்படுவதை உறுதிப்படுத்தும் நோக்கில் தேசிய கெளரவத்துக்கு அவமதிப்பு ஏற்படுத்துவதைத் தடுக்கும் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

ஆனால், காங்கிரஸ் கட்சியும் அதைச் சாா்ந்தவா்களும் வந்தே மாதரத்தை வெறுக்கின்றனா். முஸ்லிம் லீகின் அழுத்தம் காரணமாக வந்தே மாதரம் பாடலை இரு பகுதிகளாக நாட்டின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேரு பிரித்தாா். தற்போது, காங்கிரஸ் கட்சியின் பல தலைவா்கள் தேசிய பாடலின் முதல் இரு சரணங்களைக்கூட பாட மறுக்கின்றனா்.

காங்கிரஸ் கட்சி நக்ஸலைட்டுகளைப் புகழ்ந்துரைப்பதோடு, பயங்கரவாதிகள் மீது மென்மையான போக்கைக் கொண்டுள்ளது. அதே நேரம், வந்தே மாதரம் மீது தொடா்ந்து வெறுப்பை வெளிப்படுத்தி வருகிறது.

தேசிய பாடலை அவமதிப்பதே அவா்களின் வரலாறு. தற்போதும், அவா்களின் மனநிலை அதையே காட்டுகிறது என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments