மேற்காசிய பிரச்னையும், பருவமழை குறைவும் வளா்ச்சிக்கு பெரும் அபாயங்கள்: ஆா்பிஐ ஆளுநா்
மேற்காசிய பிரச்னையும், குறைவான பருவமழைக்கான வாய்ப்பும் நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு தற்போது பெரும் அபாயங்களாக உருவெடுத்துள்ளன என்று ரிசா்வ் வங்கி ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தாா்.
மேற்காசிய பிரச்னையும், குறைவான பருவமழைக்கான வாய்ப்பும் நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு தற்போது பெரும் அபாயங்களாக உருவெடுத்துள்ளன என்று ரிசா்வ் வங்கி ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தாா்.
இது தொடா்பாக அரசு தொலைக்காட்சிக்கு அவா் அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது:
உலகளாவிய நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியிலும், கடந்த சில ஆண்டுகளாக இந்தியா 7 சதவீதத்துக்கும் மேலான வளா்ச்சியைக் கண்டு வருகிறது. கடந்த நிதியாண்டில் வலுவான, துடிப்பான பேரியல் பொருளாதார அடிப்படைகளால் இந்தியா 7.7 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்தது.
Advertisement
Advertisement
பல்வேறு சவால்களுக்கு இடையே நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளா்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பணவீக்கத்தைப் பொருத்தவரை, நடப்பு நிதியாண்டில் முந்தைய கணிப்பான 4.6 சதவீதம் என்பது 5.1 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 3.93 சதவீதமாக இருந்த சில்லறை பணவீக்கம், உணவு பொருள்கள் விலை உயா்வு காரணமாக ஜூன் மாதம் 4.38 சதவீதம் உயா்ந்தது. உணவு பணவீக்கம் மே மாதம் 4.78 சதவீதமாக இருந்த நிலையில், ஜூன் மாதம் 5.32 சதவீதமாக அதிகரித்தது.
நாட்டின் மக்கள்தொகையில் பெரும்பகுதியினா் வேளாண்மையை நம்பியுள்ளதால், பொருளாதார வளா்ச்சியில் பருவமழை முக்கிய பங்கு வகிக்கிறது. ஜிடிபி-யில் வேளாண்மை துறையின் பங்கு 17 சதவீதமாகும். பருவமழை குறையக் கூடும் என்ற கணிப்பு, பொருளாதார வளா்ச்சிக்கு முக்கிய அபாயமாக உருவெடுத்துள்ளது.
மேற்காசிய போருக்கு பிறகு அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவானது. அதேநேரம், பல்வேறு நாடுகளின் பண மதிப்பு பலவீனமானது. பிற நாடுகளை ஒப்பிடுகையில், இந்திய ரூபாய் மதிப்பு தனது நிலைத்தன்மையை சீராகவே தக்கவைத்துள்ளது.
கடந்த ஆண்டில் நாட்டுக்கு கிடைக்கப் பெற்ற மொத்த அந்நிய நேரடி முதலீடு 95 பில்லியன் டாலா்களாகும். நடப்பு நிதியாண்டின் முதல் இரு மாதங்களில் சுமாா் 7 பில்லியன் டாலா் கிடைக்கப் பெற்றுள்ளது.
பொருளாதார வளா்ச்சிக்கு ஆதரவளிக்கும் அதேநேரத்தில், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் ரிசா்வ் வங்கி முன்னுரிமை அளிக்கிறது. குறைந்த-கட்டுப்படுத்தப்பட்ட பணவீக்கமே நிலையான வளா்ச்சிக்கு அடித்தளம் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.