கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் இன்ஸ்டா பக்கம் முடக்கம்! சில நிமிடங்களில் மீட்கப்பட்டது!
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டது குறித்து...
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் இன்ஸ்டாகிராம் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டது. இதனை அக்கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
எனினும் முடங்கிய சில நிமிடங்களில் அந்த இன்ஸ்டாகிராம் பக்கம் மீட்கப்பட்டது. அதில் பின்தொடரும் (ஃபாலோயர்ஸ்) நபர்களின் எண்ணிக்கையில், இதுவரை பதிவிடப்பட்ட பதிவுகளில் எந்தவித மாற்றமும் ஏற்படாமல் மீட்கப்பட்டது.
அரசுக்கு எதிராக ஜந்தர் மந்தரில் நடைபெற்றுவரும் போராட்டத்தின் நிலையை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுத்தடுத்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் பகிர்ந்துவந்த நிலையில், அப்பக்கம் முடக்கப்பட்டது.
Advertisement
Advertisement
நீட் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் ஜூன் 20 ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு ஆதரவாக லடாக்கைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் கலந்துகொண்டு உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இவரின் உண்ணாவிரதப் போராட்டத்தின் 20ஆம் நாளில் காவல் துறையினர் வலுக்கட்டாயமாக இவரை அழைத்துச் சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் இருந்தவாறு இன்று (ஜூலை 22) 25 வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இதனிடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நாடாளுமன்றம் நோக்கி நேற்று பேரணியில் ஈடுபட்டனர்.
இந்தப் பேரணியில் ஈடுபட்ட இளைஞர்களை காவல் துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் தடுத்தனர். பெண்கள் உள்பட சிறுமிகளின் மீதும் காவல்துறை தாக்குதல் நடத்தியது. இதில் இளைஞர்கள் பலர் படுகாயம் அடைந்தனர்.
எனினும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து ஜந்தர் மந்தர் திடலில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டத்துக்கு திரைப் பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்புகளில் இருந்து ஆதரவு அதிகரித்து வருகிறது.
தில்லி மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி போராட்டம் நடைபெற்று வருவதால், முன்பு இருந்ததை விட போராட்டத்தின் தீவிரம் அதிகரித்து வருகிறது.
Cockroach Janata Partys' Instagram page suspended: Recovered within minutes
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.