வணிகக் கப்பல்களில் பணிபுரியச் செல்லும் இந்தியர்களுக்கு வெளியுறவுத் துறை அறிவுரை!
வணிகக் கப்பல்களில் பணிபுரியச் செல்லும் இந்தியர்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ரஷியா - உக்ரைன் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் கருங்கடல் பகுதியில் வணிகக் கப்பல்களில் பணிபுரியச் செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
கருங்கடல் பிராந்தியத்தில் இயங்கும் வணிகக் கப்பல்களில் பணிபுரியச் செல்லும் இந்தியர்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவை பின்வருமாறு:
1. தொடரும் மோதல்களால், கருங்கடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் பாதுகாப்புச் சூழல் நிலையற்றதாக உள்ளது. அப்பகுதிகளில் இயங்கும், பயணிக்கும் வணிகக் கப்பல்கள் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் போன்ற பாதுகாப்பு அபாயங்களை எதிர்கொள்கின்றன. வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் ஏப்ரல் 2026 முதல் அதிகரித்துள்ளது. இது, 5 இந்தியர்களின் உயிரிழப்பிற்கும் காரணமாகியுள்ளது.
Advertisement
Advertisement
2. மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள இப்பிராந்தியத்தில் இயங்கும், பயணிக்கும் வணிகக் கப்பல்களில் பணிபுரிய விரும்பும் இந்தியர்கள், பணிகளை ஏற்றுக்கொள்வதற்கு முன் அங்கு நிலவும் பாதுகாப்பு அபாயங்கள் பற்றி கவனமாக மதிப்பிட அறிவுறுத்தப்படுகிறது. அதுபோன்ற பணிகளுக்குத் தேர்வாகும் நபர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். அதேபோல, பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்:
கப்பலின் பயணவழி, நிறுத்தப்படும் துறைமுகங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள், காப்பீட்டு வசதி மற்றும் அவசரகால நடவடிக்கைகள் தொடர்பாக பணியமர்த்தும் நிறுவனங்கள் மற்றும் கப்பல் இயக்குபவர்களிடமிருந்து முழுமையான தகவல்களைப் பெறவும். பணி நிபந்தனைகள் பொருந்தக்கூடிய சர்வதேச கடல்சார் தரநிலைகளுக்கு இணங்குவதையும், அவசரநிலை ஏற்பட்டால் மருத்துவ சிகிச்சை, பணியிலிருந்து வெளியேறுவது, தாயகம் திரும்புவது மற்றும் இழப்பீடு வழங்குவது போன்ற போதுமான ஏற்பாடுகளைக் கொண்டிருப்பதையும் உறுதி செய்யவும்.
உங்கள் பயணத் திட்டம் பற்றி குடும்பத்தினருக்குத் தெரியப்படுத்த அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கவும்.
கடல்சார் நிர்வாக இயக்குநரகம் மற்றும் பிற தொடர்புடைய இந்திய அரசு அதிகாரிகளால் வெளியிடப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும். அதேபோல, கப்பல் இயக்குபவர்கள் மற்றும் கடல்சார் அதிகாரிகளால் வழங்கப்படும் பாதுகாப்பு வழிமுறைகளையும் தொடர்ந்து கவனித்து அதற்கேற்றவாறு செயல்படவும். குறிப்பாக கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள கடல்சார் நிர்வாக இயக்குநரகத்தால் சமீபத்தில் 23 ஜூலை 2026 அன்று வெளியிடப்பட்ட பாதுகாப்பு அறிவுறுத்தலைப் பின்பற்ற இந்தியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
3. தூதரகத்தின் உதவி தேவைப்படும் இந்தியர்கள், அந்தப் பிராந்தியத்தில் உள்ள இந்தியத் தூதரகம் அல்லது துணைத் தூதரகங்களைத் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அவசரக்காலத் தொடர்பு எண்கள்:
இந்தியத் தூதரகம், ரஷ்யா: +79652773414
இந்தியத் தூதரகம், உக்ரைன்: +38 0933559958
Advisory from the Ministry of External Affairs for Indians heading to work on merchant ships!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.