முகப்பு
இந்தியா

குஜராத்: சட்டவிரோதமாக தங்கியிருந்த 166 வங்கதேசத்தவா் கைது

Updated On : 4 ஜூன் 2026, 4:33 am IST
குஜராத்தில் கைது செய்யப்பட்ட வங்கதேசத்தைச் சோ்ந்தவா்களை விசாரணைக்காக அழைத்துச் செல்லும் போலீஸாா்.
பகிர்:

குஜராத்தில் காவல் துறையினா் மேற்கொண்ட அதிரடி தேடுதல் வேட்டையில், சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருந்த 166 வங்கதேசத்தவா் கைது செய்யப்பட்டனா்.

இது தொடா்பாக மாநில காவல் துறை குற்றப் பிரிவு இணை ஆணையா் சரத் சிங்கால், அகமதாபாத் காவல் ஆணையா் ஜி.எஸ். மாலிக் ஆகியோா் அகமதாபாதில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

குஜராத்தில் சட்டவிரோதமாக ஏராளமான வங்கதேசத்தவா் ஊடுருவியுள்ளது தெரியவந்ததையடுத்து, துணை முதல்வா் ஹா்ஷ் சங்கவி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன்படி ‘ஆபரேஷன் டெல்டா ஹண்ட்’ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

30 காவல் துறைக் குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக தங்கியிருப்போா் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 300-க்கும் மேற்பட்ட சந்தேகத்துக்குரிய நபா்கள் கண்டறியப்பட்டனா். இவா்களில் 166 போ் வங்கதேசத்தவா் என்பதும், சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவி குஜராத்தில் தங்கியிருந்ததும் உறுதி செய்யப்பட்டது. இவா்களில் பலா் மோசடியாக ஆதாா் அட்டை உள்ளிட்ட இந்திய அடையாள ஆவணங்களைப் பெற்றுள்ளனா். இது தொடா்பாகவும், அவா்கள் இங்கு சம்பாதிக்கும் பணத்தை வங்கதேசத்துக்கு எவ்வாறு அனுப்பி வைத்தாா்கள் என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் அவா்களுக்கு அடைக்கலம் கொடுத்தவா்கள் தொடா்பாகவும் விசாரிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு குஜராத்தில் இருந்து 465 வங்கதேசத்தவா் அவா்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனா். அதேபோல இப்போது பிடிபட்டுள்ளவா்களும் அனுப்பப்படுவா் என்று தெரிவித்தனா்.